மக்கள் தொகை வளர்ந்து வரும் இத்தருணத்தில் அதிகரித்து வரும் புரதத்திற்கான தேவையை நிவர்த்தி செய்வதில் கோழி, ஆடு வளர்ப்பு தொழில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய முக்கிய அம்சங்களை மனதில் கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டமாக ‘தொல்குடி திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இத்திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், வாழ்வாதார செயல்பாடுகளை உயர்த்துவதற்கும், திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் முதற்கட்டமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 400 பழங்குடியின பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மூலம் ஆடு, கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பழங்குடியின பயனாளிகளிடையே வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தில் அடுத்தக்கட்டமாக கூடுதலாக மூன்று மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன.
இதில் அதிகப்படியாக இருளர் இன மக்கள் இருப்பதை கண்டறிந்தோம். குறிப்பாக, இத்திட்டத்தில் அடிக்கடி இடப்பெயர்வு இல்லாமல் நிரந்தர குடியிருப்பு உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களது விருப்பத்திற்கு ஏற்றபடி ஆடு வளர்ப்பு நாட்டம் உள்ளதா, கோழி வளர்ப்பில் நாட்டம் உள்ளதா என்பதை கேட்டறிந்து அவர்களை எங்களது பல்கலைக்கழகம் அழைத்து சென்று ஆடு, கோழி வளர்ப்பது எப்படி, தடுப்பூசி முறைகள், தீவனம் அளிக்கும் விதம் உள்ளிட்டவைகள் குறித்த அறிவியல் அடிப்படையிலான பயிற்சி வழங்கினோம். மூன்று மாத பயிற்சிக்கு பின்னர் பயனாளிகளுக்கு ஆடு (அ) கோழி, தீவனம், கால்நடை வளர்ப்பிற்கான கூடாரம் உள்ளிட்டவை அளிக்கிறோம்.
இதுகுறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை செயலர் லஷ்மி பிரியா பேசியதாவது: 2024-25ம் ஆண்டு 4 மாவட்டங்களில் தொல்குடி திட்டத்தின் கீழ் ஆடு மற்றும் கோழி போன்ற கால்நடைகள் பயனாளிகளுக்கு வழங்கினோம். இதன் மூலம் 400 குடும்பங்கள் பயனடைந்தன. அந்தவகையில், பழங்குடியினர் நலத்துறை இதுபோன்ற திட்டம் பின்தங்கிய பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையில், அனைத்து பழங்குடியின மக்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய ஏதுவாக அமைந்துள்ளது. இத்திட்டம் பெண்களுக்கானதாகும்.
வீட்டில் இருக்கக்கூடிய பெண்களுக்கு வருவாய் ஈட்டி தரும் விதமகாவும், அவர்களை மேம்படுத்துவதற்காகவும் தான் தொடங்கியுள்ளது. தற்போது விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பயனாளிகளிடையே அதிக வரவேற்பை பெற்றதால் கூடுதலாக இந்த மாவட்டங்களுக்கு கால்நடைகளை வழங்க ரூ.1.77 கோடியும், இத்திட்டத்தினை நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தும் விதமாக ரூ.2.77 கோடியும் 2025-26ம் நிதியாண்டினை அடிப்படையாக கொண்டு அரசாணை வெளியிட்டுள்ளோம். இதனால் சுமார் 1000 பழங்குடியின குடும்பங்களை சேர்ந்தோர் பயனடைய உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
துர்கா (திருவள்ளூர் மாவட்டம் – பொன்னேரி வட்டம்): எங்களது கிராமத்தில் மொத்தம் 350க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகிறோம். அதில் 65 பேர் ஆடு – கோழி வளர்ப்பில் ஆர்வமாக இருந்ததை பழங்குடியின நலத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக அதிகாரிகள் கண்டறிந்து தொல்குடி திட்டத்தின் கீழ் பயனாளிகளாக தேர்ந்தெடுத்தனர். எனக்கு 3 பெண் ஆடு மற்றும் 1 ஆண் ஆடு வழங்கப்பட்டன. தற்போது அவை இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. வாழ்வாதாரத்திற்கு வழியின்றி வீட்டில் முடங்கி கிடந்த நிலையில் பழங்குடியினரின் வாழ்வை மேம்படுத்துவதற்காக இதுபோன்ற திட்டத்தை அளித்த தமிழக முதல்வருக்கும், அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது இலக்கு பண்ணை வைப்பது அதனை நோக்கி எனது பயணத்தை தொடர்கிறேன்.
கால்நடை வளர்ப்பு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
* பழங்குடியின ஏழை விவசாயிகளிடையே அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பு குறித்த மேலாண்மை முறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
* ஆடு மற்றும் கோழிகளுக்கு தேவையான அடர் தீவனங்களை வழங்குதல், பூச்சி மற்றும் உண்ணி நோய் தடுப்பு மருந்துகளை வழங்குதல் மற்றும் விஞ்ஞான ரீதியிலான தீவன முறைகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், கால்நடைகளின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க திறனை அதிகரித்து, நிலையான வருவாய் ஈட்ட வழிவகுத்தல்.
* கிராமப்புற பழங்குடியினர்களிடையே தீவன உற்பத்தி முறைகள் பற்றிய திறன் மேம்பாட்டு மற்றும் செயல்முறை பயிற்சிகள் அளிப்பதன் மூலமும், மற்றும் சிறிய அளவிலான புதிய தீவன அரைக்கும் அலகுகளை அளிப்பதன் மூலமும் கால்நடைகளுக்கு தேவையான அடர் தீவனத்தை சுயமாக தயாரிக்க பயிற்சி அளித்தல்.
* கால்நடை தீவனம் தயாரித்தல் குறித்த தொழில் முனைவோர் திறன்களை பயிற்றுவித்து, நிரந்தர வருமானத்துடன் கூடுதல் வருவாய் ஈட்டும் வழிமுறைகளை உருவாக்குதல். இது பழங்குடியின ஏழை விவசாயிகளின் நீடித்த வளர்ச்சி, மேம்பாடு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும்.
The post தொல்குடி திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பில் 1000 பழங்குடியின குடும்பங்கள் பயன்: 2025-26 நிதியாண்டில் ரூ.4.5 கோடி ஒதுக்கீடு; நாமக்கல், தி.மலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விரிவாக்கம்; ஆதிதிராவிடர், பழங்குடியின நலத்துறை செயலர் தகவல் appeared first on Dinakaran.