புஜ்: குஜராத் மாநிலம் கட்ச் மாவட்ட ஆட்சியராக பிரதீப் சர்மா என்ற ஐஏஎஸ் அதிகாரி கடந்த 2004ம் ஆண்டு பொறுப்பு வகித்து வந்தார். அப்போது மாநில அரசின் விதிகளை மீறி, அரசு நிலத்தை சா பைப்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ஒதுக்கினார். இதனால் அரசு கரூவூலத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு சிஐடி வழக்குப்பதிவு செய்தது. அதனடிப்படையில் 2011 மார்ச் 4ம் தேதி பிரதீப் சர்மா கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் அலகாபாத் அமர்வு நீதிமன்றம் பிரதீப் சர்மாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.75,000 அபராதமும் விதித்து இந்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி உத்தரவிட்டது.
இதுதொடர்பாக கட்ச் மாவட்ட நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் பிரதீப் சர்மாவுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கட்ச் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும், நதுபாய் தேசாய், நரேந்திர பிரஜாபதி மற்றும் அப்போதைய துணை ஆட்சியர் அஜித்சிங் ஜலா ஆகியோருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும், மேலும் ரூ.10,000 அபராதமும் விதித்து கட்ச் நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post நில ஒதுக்கீட்டில் முறைகேடு; குஜராத் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.