அடுத்து நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல், பீகார் தேர்தலை குறிவைத்து காய் நகர்த்துவதாக விமர்சனம்

புதுடெல்லி: அடுத்து நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகார் சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம உரிமை வழங்கி சமூக நீதியை உறுதி செய்ய சாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய தேவையாக உள்ளது. இதன் மூலம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்கப் பெறும். இடஒதுக்கீடு தொடர்பான சட்ட சிக்கல்களுக்கும் தீர்வு காண முடியும்.

ஆகவே, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி சமீபகாலமாக தீவிரமாக வலியுறுத்தி வருகிறார். இந்தியா கூட்டணி கட்சியின் பிரதான தேர்தல் வாக்குறுதியாக சாதிவாரி கணக்கெடுப்பு இடம் பெற்றுள்ளது. மேலும், பல மாநில அரசுகளும் தங்கள் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பாஜ கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜ மேலிடமும் சாதி வாரி கணக்கெடுப்பை ஆதரிக்கவில்லை.

இந்நிலையில், பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய பாஜ அரசு பணிந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அரசியல் விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

வரவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒன்றிய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி எப்போதும் மோடி அரசின் முதன்மையான முன்னுரிமையாக இருந்து வருகிறது. அதை நோக்கி அரசு எடுத்து வைக்கும் மேலும் ஒருஅடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. காங்கிரசும் அதன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சமீபகாலமாக குரல் கொடுத்தாலும், நீண்டகாலமாக சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் எதிர்த்தது என்பதே உண்மை. நாடு சுதந்திரம் அடைந்தத்திற்குப் பிறகு ஒருமுறை கூட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில்லை.

கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தார். பல கட்சிகளின் பரிந்துரை அடிப்படையில், முழுமையான மக்கள்தொகை கணக்கெடுப்பாக இல்லாமல், சாதி கணக்கெடுப்பு மட்டும் நடத்த காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. இதன் மூலம் அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை அரசியல் ஆதாயத்திற்கான ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்த முயற்சிப்பதை அறியலாம். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 246ன்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பானது, ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக 7வது அட்டவணையில் 69வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது. இதில், சில மாநில அரசுகள், அவர்கள் மாநிலத்திற்குள்ளாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. இந்த செயல்முறையை சிலர் சரியாக செய்திருந்தாலும், சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி உண்மைத் தகவல்களை மறைத்துள்ளனர். வெளிப்படைத் தன்மையில்லாத கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

எனவே, அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் போது, அதனுடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி நாட்டின் வளர்ச்சியை தொடரச் செய்யும். மேலும், கடந்த காலத்தில் இந்த அரசு சமூகத்தின் எந்த பிரிவினரையும் பாதிக்காமல், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது போல, சமூகம் மற்றும் நாட்டின் மதிப்புகள் மற்றும் நலன்களை காப்பதை உறுதிபூண்டுள்ளது என்பதை நிரூபிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் பாஜ கூட்டணி ஆட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இவ்விவகாரத்தை எழுப்பி கடும் அழுத்தம் தந்து வருகின்றன. இதனால் வேறுவழியின்றி பீகார் தேர்தலை குறிவைத்தே ஒன்றிய பாஜ அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த பணிந்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

* தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
தமிழ்நாட்டை பொறுத்த வரை, சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டுமென கடந்த ஆண்டு ஜூன் 26ம் தேதி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் பொறுப்பு என்பதால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசே நடத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

* அரசின் திடீர் அறிவிப்பு ராகுல் காந்தி வரவேற்பு
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’11 ஆண்டுகள் எதிர்ப்புக்குப் பிறகு, மக்கள்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துவதாக கூறியுள்ள ஒன்றிய பாஜ அரசின் திடீர் முடிவை வரவேற்கிறேன். இதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால், இதை செயல்படுத்துவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த கணக்கெடுப்பு எப்போது செய்யப்படும் என்பதை அறிய விரும்புகிறோம். இடஒதுக்கீடு மீதான 50 சதவீத உச்சவரம்பை நீக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்புக்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் அதற்கான விலையை தர வேண்டும். அவர்கள் மீது பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

* பீகார் கணக்கெடுப்பில் அம்பலமான உண்மை
பீகாரில் அம்மாநில அரசு நடத்திய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அங்கு 15% மட்டுமே உள்ள பொதுப்பிரிவினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது, ஆனால் 63% உள்ள ஓபிசி பிரிவினருக்கு 30% இடஒதுக்கீடே வழங்கப்படுகிறது. முன்னேறிய வகுப்பினருக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்று கூறி அதிக இடஒதுக்கீடு வழங்கப்படும் உண்மை அம்பலமானது. 1931 கணக்கெடுப்பின்படி நாட்டில் மொத்த சாதிகள் 4,147 பிற்படுத்தப்பட்டோர் 52 சதவீதம் இதன் அடிப்படையில்தான் மண்டல் கமிஷன் ஓபிசிகளுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரைத்தது.

* எதிர்க்கட்சிகள் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு பணிந்துள்ளது
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு சம்மதித்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றியாக கொண்டாடப்படுகிறது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘எப்போதும் இல்லாததைவிட தாமதே மேல்’’ என கூறி உள்ளார். பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பதிவில், ‘‘சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கேட்டதற்காக எங்களை சாதிவாதிகள் என்று அழைத்தவர்களுக்கு பொருத்தமான பதில் கிடைத்துள்ளது. இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. சங்கிகளை எங்கள் அசைவுக்கு ஏற்ப ஆட வைப்போம்’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ‘‘சமூக நீதிக் கொள்கையை செயல்படுத்துவதில் விலகி நின்ற பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் சமூகத்தை பிளவுபடுத்துவதாக பொய்யாகக் குற்றம் சாட்டினார். இனியாவது அவர் சாதி கணக்கெடுப்பை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும்’’ என்றார். மார்க்சிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் கூறுகையில், ‘‘பீகார் தேர்தல்களை கருத்தில் கொண்டு ஒன்றிய அரசின் ஏமாற்று வேலை இது’’ என்றார்.

ஆர்ஜேடி மாநிலங்களவை எம்.பி. மனோஜ் ஜா கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு ஒன்றிய அரசு அடிபணிந்துள்ளது. இது மக்களின் வெற்றி’’ என்றார். அதே சமயம், சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்புக்காக பிரதமர் மோடிக்கு அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

* சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்? எதற்காக?
* மக்கள் தொகையில் பல்வேறு சாதியினரின் பங்கு விவரம் அறிய.
* அதற்கேற்ப இடஒதுக்கீடு வழங்கல்.
* அவர்களின் பொருளாதாரம் நிலை.
* கல்வி, வேலைவாய்ப்பு விவரங்கள் அறிய.
* சம வாய்ப்புகளை உறுதி செய்தல்
* அதற்காக திட்டங்களை வகுத்தல்

* சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலங்கள்
கர்நாடகா: கடந்த 2015ல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கர்நாடகாவில் நடத்தப்பட்டது. ஆனால், அதன் முடிவு இதுவரை வெளியிடப்படவில்லை. முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அதன் முடிவுகளை வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளது.
பீகார்: கடந்த 2022ம் ஆண்டு நாட்டிலேயே முதல் முறையாக பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அறிக்கை வெளியிட்டது. அதில் இந்து, முஸ்லிம்கள் என மதத்தின் அடிப்படையில் மக்கள்தொகையும், பொது பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்ற பிரிவுகளில் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டன.
ஆந்திரா: கடந்த ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது, ஆந்திரப்பிரதேச அரசு சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியது.
தெலங்கானா: தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு சமீபத்தில் அதன் முடிவுகளை வெளியிட்டது.
அடுத்ததாக 2026ல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

* மன்மோகன் அரசு நடத்திய சமூக பொருளாதார கணக்கெடுப்பு
கடந்த 2011ல் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதிவாரி மக்கள் தொகை விவரங்களை கண்டறிவதற்காக சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்தியது. ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு 2011 ஜூனில் துவங்கியது. நாடு முழுவதும் வீடு வீடாக சென்று அனைவரின் சாதி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஆனால், ஆட்சி மாற்றத்துக்கு பின் பிரதமரான மோடி, அந்த கணக்கெடுப்பு விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.

* பாதுகாப்பு அமைச்சரவை முக்கிய ஆலோசனை
காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவையும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் எடுத்த பிற முடிவுகள்
* வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும், 2025-26ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்திற்கான கரும்பு பயிருக்கு உரிய நியாயமான மற்றும் ஆதாய விலையை குவிண்டாலுக்கு 4.41 சதவீதம் அதிகரித்து ரூ.355 ஆக அமைச்சரவை நிர்ணயித்துள்ளது.
* மேகாலயாவின் ஷில்லாங் அருகே மாவ்லிங்குங் முதல் அசாமின் சில்சார் அருகே பஞ்ச்கிராம் வரை 166.80 கிமீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையை அதிவேக பசுமைவழித்தடமாக மேம்படுத்தும் ரூ.22,864 கோடி திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

* நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
* கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
* கொரோனா காரணமாக 2021ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. தற்போது 4 ஆண்டாகியும் இதுவரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான எந்த பணிகளையும் ஒன்றிய பாஜ அரசு மேற்கொள்ளவில்லை.
* அடுத்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* 94 ஆண்டுகளுக்கு பிறகு…
1881-82ல் இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது முதல்1931-ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகள் சாதிவாரி கணக்கெடுப்பும் அங்கமாகவே இருந்துள்ளது. இரண்டாவது உலகப் போரால் ஏற்பட்ட பாதிப்பால் 1941-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 1947-ல் இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1951ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

தேவையற்ற சமூக பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அஞ்சி சாதி விவரங்களை கணக்கெடுக்க வேண்டாம் என்று அப்போதைய தலைவர்கள் முடிவு செய்தனர். இதனால், அதன்பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சாதி விவரங்கள் மக்களிடம் கேட்கப்படவில்லை. ஆனால், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மக்கள் பற்றிய விவரங்கள் மட்டும் சேகரிக்கப்பட்டது. இதனால், 94 ஆண்டுகளுக்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

The post அடுத்து நடைபெறும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல், பீகார் தேர்தலை குறிவைத்து காய் நகர்த்துவதாக விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: