பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் உண்டா? ஒன்றிய அமைச்சர் பதில்

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடத்துவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் கூறினார். காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதற்கான பதில் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டுமென காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சரும், ஒன்றிய சட்ட அமைச்சருமான அர்ஜூன் ராம் மேக்வால் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்ட வேண்டுமென்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் விரைவில் முடிவெடுத்ததும் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படும்.

சமீபத்தில் ஒரு போஸ்டரில் ஒருபாதி அம்பேத்கர் படமும், மறுபாதி அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி தலைவர்) படமும் அச்சிடப்பட்டிருந்தது. இது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சிற்பியும், தலித்களின் அடையாளமாகவும் உள்ள அம்பேத்கரை அவமதிக்கும் செயல். இந்த புகைப்படம் தலித்களின் வாக்குகளை பெற்றுத்தரும் என்கிற மாயையில் அகிலேஷ் வாழ்கிறார்.

அம்பேத்கரை தேர்தலில் 2 முறை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது. ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. அப்படிப்பட்ட கட்சியுடன் அகிலேஷ் கூட்டு சேர்ந்துள்ளார். இவ்வாறு கூறினார்.

The post பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் உண்டா? ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Related Stories: