இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு; மீண்டும் இணைகிறார்களா உத்தவ் – ராஜ்தாக்கரே?.. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு


மும்பை: மகாராஷ்டிராவில் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் வலுத்துள்ள நிலையில், மராத்தி மொழியை பாதுகாக்க உத்தவ் தாக்கரேவும் ராஜ்தாக்கரேவும் மீண்டும் இணைய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் தலைவர்களான உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவும் உறவினர்கள் ஆவர். பிளவுபடாத சிவசேனா கட்சி பால்தாக்கரே தலைமையில் செயல்பட்ட போது ராஜ்தாக்கரே முக்கிய அங்கம் வகித்தார். 2006ம் ஆண்டு சிவசேனா கட்சியுடன் ராஜ்தாக்கரேவுக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் கட்சியில் இருந்து விலகி சென்ற ராஜ்தாக்கரே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்த சூழலில், உத்தவ் தாக்கரேவும் ராஜ்தாக்கரேவும் மீண்டும் இணைய இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சுகள் எழுந்துள்ளது. அண்மையில் மூத்த நடிகர் மகேஷ் மஞ்ச்ரேக்கருடனான பாட்காஸ்ட்டில், ராஜ்தாக்கரே உரையாடினார். அப்போது பேசிய ராஜ்தாக்கரே, ‘மராத்தி மொழியை பாதுகாக்கும் போராட்டத்தை விட எங்களது தனிப்பட்ட பிரச்னைகள் முக்கியமானது இல்லை என்று நினைக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மராத்தி மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இந்தி திணிப்பை எதிர்ப்பது அவசியம். எனக்கு மகாராஷ்டிராவின் நலன் முக்கியம். இதற்காக நான் உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். உத்தவ் தாக்கரே இதனை ஏற்பாரா என்பது தான் எனது கேள்வி?’ என்று வெளிப்படையாக பேசினார்.

இதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘மராத்தி மொழிக்காகவும் மகாராஷ்டிராவுக்காகவும் எங்களது கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைக்க தயாராக இருக்கிறேன். அவருடன் ஒன்றாக இணைந்து பணியாற்ற நான் தயார். ஆனால் ராஜ்தாக்கரே இனிமேல் மகாராஷ்டிராவுக்கு எதிரான கட்சிகளை ஆதரிக்கக் கூடாது. சத்ரபதி சிவாஜி மகாராஜா முன்பு சத்தியம் செய்து இதற்கு உறுதியளிக்க வேண்டும்’ என்று தனது விருப்பத்தை தெரிவித்தார். இதன் மூலம் இருவரும் இணைவது உறுதியாகி உள்ளதால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு; மீண்டும் இணைகிறார்களா உத்தவ் – ராஜ்தாக்கரே?.. மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: