தவறு செய்யும் பெரும்பாலானோர் மன்னிப்பு கேட்பதில்லை. மன்னிப்பு கேட்க யோசிக்கிறார்கள். காரணம், நான் பிரச்னைக்கு காரணம் இல்லையே, பிரச்னையை நான் ஆரம்பிக்கவில்லையே, அதனால், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். வேண்டுமானால் பிரச்னையை ஆரம்பித்த அவன் (ள்) என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும் என்ற ஈகோ மனம் படைத்தவர்களாய் இருப்பதே.பிரச்னையை யார் ஆரம்பித்தால் என்ன? கணவன், மனைவி, தாய், தந்தை, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நண்பன் என உறவுகள் எப்படிப்பட்டவராய் இருந்தாலும் அவர்களிடையே இருக்கும் உறவு உண்மையானதாய் இருந்தால், அந்த உறவை அவர்கள் மதிக்கிறார்கள் எனில் தவறு யார் பக்கம் இருந்தாலும் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும் தயங்கமாட்டார்கள். அந்த உறவு மீண்டும் நீடிக்கும்.
ஆனால், ஒருசிலர் தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுவிட்டு மீண்டும் அதே தவறை செய்யத் துணிவார்கள், செய்வார்கள். இதனால் அவர்களிடையே இருக்கும் நம்பிக்கை உடைக்கப்படுகிறது. உறவும் பாதிக்கப்படுகிறது.மன்னிப்பு என்பது உறவில் ஏற்பட்ட விரிசலை இணைக்கும் பாலமாக அமைகிறது. அதேநேரத்தில் அவர்களிடையே இருக்கும் நம்பிக்கையும் அதிகரிக்கிறது. மன்னிப்பு கேட்பதன் வழியாகவும், மன்னிப்பதன் வழியாகவும் அவர்களிடையே இருக்கும் பிரச்னை கலந்தாலோசிக்கப்பட்டு தீர்க்கப்படுகிது. மன்னிப்பு கேட்காமல் மன்னிக்காமல் இருப்பதால் அந்தப் பிரச்னை மீண்டும் மீண்டும் அவர்கள் வாழ்வில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தும்.
‘‘பிரச்னை என்பது உறவு வாயிலைப் பூட்டும் சாவி, மன்னிப்பு என்பது பிரச்னையால் பூட்டப்பட்ட உறவு வாயிலைத் திறக்கும் சாவியாகும்.’’ஒருமுறை சாவியைப் பார்த்து சுத்தியல் கேட்டது, நான் உன்னை விட வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமம்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்துவிடுகிறாயே! அது எப்படி? என்று. அதற்கு சாவி சொன்னது, நீ என்னைவிட பலசாலிதான். அதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன் என்றதாம்.ஒருவன் செய்த தவறுக்காக அவனை பழிவாங்குவதனாலோ, தண்டிக்கப்படுவதாலோ அந்தத் தவறிலிருந்து அவனை திருத்த இயலாது. மன்னிப்பு என்ற ஒன்று மட்டுமே அவன் உள்ள உணர்வைத் தூண்டி அந்தத் தவறிலிருந்து திருந்தி வாழ வைக்கும். எனவே, அன்பு என்ற செடியிலிருந்து மன்னிப்பு என்ற வாசனைப்
பூ பூப்பதாக. ஆமென்.
– அருள்முனைவர்: பெ.பெவிஸ்டன்.
The post அன்புச் செடியில் பூக்கும் மன்னிப்பு appeared first on Dinakaran.