கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடு: வீடியோ ஆதாரங்களுடன் செயல் அதிகாரி குற்றச்சாட்டு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நேற்று செயல் அதிகாரி ஷியாமளா ராவ், கடந்த மார்ச் 2021 முதல் மார்ச் 2024ம் ஆண்டு வரை நடந்த ஆட்சியில் கோ-சாலையில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அறிக்கையுடன் வீடியோ கிளிப்பிங் மற்றும் புள்ளிவிவர ஆதாரங்களை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆட்சிக் காலத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோ-சாலையில் பசுக்கள் குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் பாசி, புழுக்கள் இருந்தது. இதனை அப்போதைய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடந்த மார்ச் 2021ம் ஆண்டு முதல் மார்ச் 2024 வரை மிகப்பெரிய முறைகேடுகள் மோசடிகள் தேவஸ்தானத்தில் நடந்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இறந்த மாடுகள் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் மட்ட அதிகாரிகளை நியமிப்பதற்கான விதிகள் மீறப்பட்டன.

பொது மேலாளர் நிலை அதிகாரிகளின் நியமனங்களில் முறைகேடுகள் நடந்தன. தகவல் தொழில்நுட்ப துறையின் தோல்வியால் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்தன. ஒரு தரகர் 50 முறை சேவை டிக்கெட்டைப் பெற்றுள்ளார். 200 முறை அறைகள் பெற்றுள்ளார். அவ்வாறு புரோக்கர்கள் இல்லாமல் தரிசனம், அறைகள் பெறமுடியாத சூழல் இருந்தது.

39 ஆயிரம் புரோக்கர்கள் கண்டறிந்து பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளனர். பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பசு நெய் கொள்முதலில் முறைகேடுகள் நடந்தன. அன்னதான அரிசி, பருப்பு தரம் மிகவும் மோசமாக இருந்தது. சுவாமிக்கு படைத்த நைவேத்தியம் பிரசாதம் இயற்கை பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறி பல முறைகேடுகள் நடந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

* கோசாலையில் இறந்த பசுக்கள் எத்தனை?
செயல் அதிகாரி ஷியாமளா ராவ் கூறுகையில், தேவஸ்தான கோசாலையில் 100 பசுக்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததாக முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் பூமணா கருணாகர ரெட்டி கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. சில நன்கொடையாளர்கள் தேவஸ்தானத்திற்கு வயதான மற்றும் நோய் பாதிக்கப்பட்டு குணமடைந்த பசுக்களை நன்கொடையாக வழங்கினர்.

இதுபோன்ற பசுக்களை தானம் செய்வதால், சராசரியாக ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 15 பசுக்கள் இறக்கின்றன. கடந்த 2024ம் ஆண்டில், எஸ்.வி. கோசாலையில் 179 பசுக்கள் இறந்தது. 2025 ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுமார் 43 பசுக்கள் அவற்றின் வயது மற்றும் நோய்களால் இறந்தன. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 59 கன்றுகளும் பிறந்தன என்றார்.

The post கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பல்வேறு முறைகேடு: வீடியோ ஆதாரங்களுடன் செயல் அதிகாரி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: