வாரணாசி: உபி, வாரணாசியில் ரூ. 3,880 கோடி மதிப்பிலான 44 நலத் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது மோடி பேசுகையில், ‘‘அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கையின்படி நாட்டுக்காக உழைத்து வருகிறோம்.இந்த உணர்வோடு, ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். இதற்கு நேர்மாறாக, அதிகார வெறி கொண்டவர்கள், தேசிய நலனால் அல்ல, மாறாக குடும்ப அடிப்படையிலான ஆதரவு மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் ஒருமித்த கவனம் செலுத்தி, இரவும் பகலும் அரசியல் விளையாட்டுகளை விளையாடுகிறார்கள்.முன்பு கிழக்கு உபியில் சுகாதார வசதிகள் குறைவாக இருந்தன. ஆனால் இன்று சுகாதார வசதிகளுக்கான தலைநகராக காசி மாறி உள்ளது.
இன்று இந்தியா வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் இரண்டையும் ஒன்றாகக் கொண்டு முன்னேறி வருகிறது. காசி இதற்கு சிறந்த முன்மாதிரியாகும். காசிக்குச் செல்பவர்கள் அனைவரும் அதன் உள்கட்டமைப்பு வசதிகளைப் பாராட்டுகிறார்கள். டெல்லி மற்றும் மும்பையின் பெரிய மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகள் காசியில் வந்துள்ளன. இதுதான் வளர்ச்சி. 2036 ஒலிம்பிக் இந்தியாவில் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது’’ என்றார். இதில் ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டனர்.
The post 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முயற்சி: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.