புதுடெல்லி: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சீனர்களுக்கு இந்தியாவில் பணிக்கான விசாவை பெற்று தருவதில் 50 லட்சம் ரூபாய் முறைகேடாக பெற்று கொண்டு விசா வழங்க பரிந்துரை செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதேவிவகாரத்தில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தவிர்க்க கார்த்தி சிதம்பரம் இடைக்கால தடை பெற்றுள்ளார்.
மேலும் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகள் மீதான விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதில் அமலாக்கத்துறையின் சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு மீது விசாரணை நடத்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்தது.இந்த வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு தடை கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர துதேஜா பிறப்பித்த உத்தரவில், “திட்டமிடப்பட்ட குற்றத்துக்கான வழக்கில் குற்றச்சாட்டுகள் இறுதி செய்யப்படும் வரை, அமலக்கத்துறை பதிவு செய்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்வதை ஒத்தி வைக்கலாமா அல்லது இடைக்கால தடை விதிக்கலாமா? என கேள்வி எழுப்பி, இதுகுறித்து அமலக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்குகளின் குற்றச்சாட்டு பதிவு மீதான விசாரணையை, சிறப்பு விசாரணை நீதிமன்றம் ஒத்தி வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
The post விசா முறைகேடு வழக்கு; கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கை ஒத்தி வையுங்கள்: விசாரணை நீதிமன்றத்துக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.