மக்கள் கூட்டமாக சூழ்ந்ததால் பரபரப்பு ஜெகன்மோகன் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரின் கண்ணாடி சேதம்: கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க மக்கள் கூட்டமாக சூழ்ந்ததால், ஜெகன்மோகன் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரின் கண்ணாடி சேதமடைந்தது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் ராப்தாடு தொகுதியில் உள்ள பாப்பிரெட்டிப்பள்ளியை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் நல தலைவர் குருபா லிங்கமய்யா கொலை செய்யப்பட்டார்.

அவரது குடும்பத்தினரை சந்திக்க பெங்களூரில் இருந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஹெலிகாப்டரில் வந்தார். அப்போது ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்க காத்திருந்த மக்கள் ஹெலிகாப்டரை சூழ்ந்தனர். இதில் ஹெலிகாப்டரின் கண்ணாடி உடைந்து சேதமானது. இதனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு விஐபிக்களை ஏற்றி செல்ல முடியாது என, ஜெகன்மோகன்ரெட்டி தரையிறங்கிய உடனேயே ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றுவிட்டது.

இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி மக்கள் கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து லிங்கமய்யாவின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய ஜெகன்மோகன் ரெட்டி, காரில் பெங்களூரு புறப்பட்டு சென்றார்.  பீகாராக மாறிய ஆந்திரா: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ‘ஆந்திர மாநிலத்தின் நிலைமையை பார்த்தால், பீகார் போன்று காணப்படுகிறது.

மோசமடைந்து வரும் அரசியல் சூழ்நிலையும், ரெட் புக் என்ற பெயரில் பழி வாங்கும் கொலை ஆட்சியும் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்களில் சந்திரபாபுவுக்கு பலம் இல்லாவிட்டாலும், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தரக்குறைவான அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தற்போது வரை தேர்தல் நடைபெற்ற 50 இடங்களில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 39 இடங்களை வென்றது. முதலமைச்சர் என்ற ஆணவத்துடன் தனக்கு அனைத்து பதவியும் வேண்டும் என்று கூறி, சட்டம் ஒழுங்கை அழித்து, சந்திரபாபு நாசவேலை செய்கிறார்’ என்றார்.

The post மக்கள் கூட்டமாக சூழ்ந்ததால் பரபரப்பு ஜெகன்மோகன் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரின் கண்ணாடி சேதம்: கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி appeared first on Dinakaran.

Related Stories: