சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து பவன் கல்யாண் மகன் காயம்: 10 வயது சிறுமி பலி; 20 பேருக்கு சிகிச்சை

திருமலை: சிங்கப்பூர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் சிக்கிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர். வயது 8. சிங்கப்பூர் பள்ளியில் படித்து வருகிறான். பள்ளி ரிவர் வேலி சாலை அமைந்துள்ளது. 3 மாடி தளத்தில் இயங்கி வருகிறது. அங்கு சமையல் பள்ளி, நாடகக் குழு மற்றும் குழந்தைகளுக்கான ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உட்பட பல வகுப்புகள் உள்ளன. அந்த பள்ளியில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கருக்கு கைகள் மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. பவன் கல்யாண் மகன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் 10 வயது சிறுமி உயிரிழந்ததை சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் உறுதிப்படுத்தினார். மேலும் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில் பள்ளி கட்டிடத்திலிருந்து கறுப்பு புகை வெளியேறுவதையும், குழந்தைகள் மூன்றாவது மாடியில் அமர்ந்திருப்பதையும் காட்டியது. சிக்கித் தவிக்கும் குழந்தைகளை மீட்பதற்காக மீட்பு படையினர் உள்பட பலர் கட்டிடத்தின் மீது ஏறுவதையும் காண முடிந்தது. சுமார் 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது.

மகன் தீக்காயம் அடைந்த நிலையில் தற்போது அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை முதல்வர் பவன் கல்யாண் உடனே சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால் ‘அரக்கு அருகே உள்ள குரிடி பழங்குடியினர் வசிக்கும் கிராமத்திற்கு இன்று(நேற்று) சென்று அங்கு அமைந்துள்ள பிரமராம்பா சமேத மல்லிகார்ஜுன சுவாமியை வணங்கிய துணை முதல்வர் பவன் கல்யாண், கிராம தலைவர் ராமுலம்மா கோவில் கமிட்டியினருடன் இணைந்து பஞ்சாம்ருத அபிஷேகம் செய்தனர். பின்னர் கோயில் அர்ச்சகர்கள் பவன் கல்யாணுக்கு தீர்த்த பிரசாதத்தை வழங்கினர். பின்னர் கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மகனை சந்திக்க நேற்றிரவு பவன் கல்யாண் விமானத்தில் சிங்கப்பூருக்கு புறப்பட்டார்.

The post சிங்கப்பூர் பள்ளியில் தீ விபத்து பவன் கல்யாண் மகன் காயம்: 10 வயது சிறுமி பலி; 20 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: