வக்பு திருத்த மசோதா பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு ஜம்மு காஷ்மீர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் கூட்டத்தின் 2ம் நாள் அமர்வு நேற்று காலை மீண்டும் கூடியது. அப்போதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்து விட்டு வக்பு திருத்த மசோதா பற்றி விவாதிக்க வேண்டும் என மக்கள் மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி(பிடிபி), அவாமி இத்தேஹாத் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் நேற்றும் அவைத்தலைவர் அனுமதி மறுக்கவே உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே 30 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் அமளி தொடரவே பிற்பகல் 1 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் பேரவை தலைவர் அப்துல் ரஹீம் ராதருக்கு எதிராக மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சஜாத் கனி லோன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து பேரவை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், “ஒத்தி வைப்பு தீர்மானம் மீதான விவாதங்களை நிராகரித்தது, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க மறுத்தது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்தை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தடையாக உள்ள அவைத்தலைவர் அப்துல் ரஹீம் ராதருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

 

The post வக்பு திருத்த மசோதா பற்றி விவாதிக்க அனுமதி மறுப்பு ஜம்மு காஷ்மீர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: