திருச்செந்தூர், ஏப். 2: வெயிலின் கொடுமையில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானை துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி தன் உடல் மீது ஊற்றிக் கொண்டு உற்சாகமாக குளியல் போட்டது.
திருச்செந்தூர் முருகன் கோயில் தெய்வானை யானை ராஜகோபுரம் அருகில் உள்ள குடிலில் பாகன்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி நிறைவு பெற்ற மாசித்திருவிழாவில் சுவாமி சப்பர வீதியுலாவில் யானை வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. திருவிழா நிறைவு பெற்றதையடுத்து தெய்வானை யானை வழக்கம்போல காலை மற்றும் மாலை வேளைகளில் கோயில் வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறது. மற்ற நேரங்களில் யானை தங்கும் குடிலில் பழங்கள், பச்சை ஓலைகள் உண்டு ஓய்வெடுத்து வருகிறது. அதனை கூண்டுக்கு வெளியில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்து பக்தர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக திருச்செந்தூர் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் யானை கூண்டில் உள்ள நீர் தெளிப்பானில் (ஷவர்) குளித்தும், பாகன்களால் குழாய் மூலம் தண்ணீர் ஊற்றியும் குளிப்பாட்டப்பட்டு வருகிறது. வழக்கம்போல பாகன்கள் குளிப்பாட்டிய போதும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக தெய்வானை யானை அருகில் இருக்கும் வாளியில் இருந்து நீரை துதிக்கையால் உறிஞ்சி எடுத்து தன் உடல் மீது ஊற்றிக்கொண்டது. இதனை தூரத்தில் இருந்தே பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.
The post வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை உற்சாக குளியல் appeared first on Dinakaran.