மது அருந்திய நண்பர்களுடன் இருந்த போலீஸ்காரர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

திருவெறும்பூர், ஏப்.2: அரசு பள்ளி மைதானத்தில் மது அருந்திய நண்பர்களுடன் இருந்த போலீஸ்காரர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்பி செல்வநாக ரெத்தினம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டூர் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு காட்டூர் பகுதியை சேர்ந்த சில நபர்கள், மது அருந்தி கொண்டிருந்ததாக இந்திய மாணவர் சங்க மாநில துணை செயலாளர் மோகன்குமார், திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது, அங்கு நான்கு நபர்கள் இருந்துள்ளனர். அதில் இருவர் மது அருந்தியும், மற்ற இருவர் மது அருந்தாமலும் இருந்துள்ளனர். அதில் ஒருவர் மணிகண்டம் காவல் நிலைய முதல்நிலை காவலர் இளையராஜா என தெரியவந்துள்ளது.

மேலும், இளையராஜா அப்பகுதியை சேர்ந்தவர் என்பதாலும், மேற்படி நபர்கள் அவரது நண்பர்கள் என்ற வகையில் தற்செயலாக அப்பகுதிக்கு சென்றபோது அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார் என விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும், அந்த 4 நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து மூச்சு பகுப்பாய்வு சோதனை செய்தபோது, காட்டூர் பரி நகரை சேர்ந்த கார் டிரைவர் மகேஸ்வரன் (42). வடக்கு காட்டூர் பாரதிதாசன் நகர் 6வது தெருவை சேர்ந்த ரயில்வே ஊழியர் பிரபு (41) ஆகிய இருவரும் மது அருந்தி இருந்ததும், வடக்கு காட்டூர் பெரியார் நகரை சேர்ந்த கார் டிரைவர் வினோத் (41), காவலர் இளையராஜா ஆகிய இருவரும் மது அருந்தியதற்கான எந்தவித முகாந்திரமும் இல்லை என தெரியவந்துள்ளது. இதில் மது அருந்திய இருவரும் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் ஜாமினில் விடுக்கப்பட்டனர்.

காவல் துறை பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தில் போலீஸ்காரர் இளையராஜா இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் மது அருந்திய நபர்களுடன் பேசிக்கொண்ருந்த காரணத்தினால் அவரை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உத்தரவின் பேரில் எஸ்பி செல்வநாகரெத்தினம், காவலர் இளையராஜவை திருச்சி சரக காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று மாற்றி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

The post மது அருந்திய நண்பர்களுடன் இருந்த போலீஸ்காரர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: