அதிமுக கூட்டணி குறித்து பேச விரும்பவில்லை; ஒரு கட்சியை அழித்தால் பாஜவும் அழிந்துவிடும்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி

கோவை: அதிமுக கூட்டணி குறித்து பேச விரும்பவில்லை, ஒரு கட்சியை அழித்தால் பாஜவும் அழிந்துவிடும் என்று அண்ணாமலை கூறினார். கோவை விமான நிலையத்தில் பாஜ மாநிலத் தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக கூட்டணி குறித்து நான் பேச விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை அமித்ஷாவின் கருத்தை, இறுதி கருத்தாக பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தலைவர் மீதோ, கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான் யாருக்கும் எதிரானவனும் கிடையாது. பாஜ மற்றும் தமிழக நலன் ஆகியவைதான் எனக்கு முக்கியம். நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லி இருக்கிறேன். அதன் பொருளையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கள் கட்சியின் தலைவர்கள் சரியான முடிவு எடுப்பார்கள். அவர்களிடம் சொல்ல வேண்டியதை நான் சொல்லி வந்திருக்கிறேன். அரசியலில் என்ன நடக்கவேண்டுமோ அது சரியான நேரத்தில் நடக்கும். என்னால் யாருக்கும் எந்த பிரச்னையும் இருக்காது. நான் மாறி மாறி பேசுபவன் கிடையாது. என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பாதுகாப்பு கொடுப்பதில் விருப்பு வெறுப்பு பார்ப்பதில்லை. விஜய் என்றாலும் சரி, செங்கோட்டையன் என்றாலும் சரி எல்லார்க்கும் ஒன்றுதான்.

எங்களுக்கும் விஜய்க்கும், செங்கோட்டைனுக்கும் எந்த உறவும் கிடையாது. மரியாதைக்குரிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். அவர் அவருடைய கட்சி தொண்டர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அதிமுகவில் இருக்கும் பிரச்னைக்குள் செல்ல விரும்பவில்லை. பாஜ எதற்கு இன்னொரு கட்சியில் தலையிட வேண்டும்? பாஜ இன்னொரு கட்சியை அழித்து வளரும் என்றால், பாஜவும் அழிந்துவிடும் என்றுதான் சொல்லி வருகின்றேன். பாஜ எந்த கட்சியையும் அழித்து வளராது. அதிமுகவில் இருக்கும் கோர்ட் வழக்குகள் அவர்களுடைய பிரச்னை. இதில் எங்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

வாய் வியாபாரிகளுக்கு மாமனார் பணம்
அண்ணாமலை அளித்த பேட்டியில், 2020ல் எதற்காக அரசியலுக்கு வந்தேனோ, அந்த வெறியும், பசியும், நெருப்பும் உள்ளே எரிந்து கொண்டுள்ளது. அதேநேரம் கட்சி முதன்மையானது. என் மீது போடப்படும் வழக்குகளில் பத்தில் ஒரு சதவீதம் கூட மற்ற கட்சிக்காரர்கள் மீது போடப்படுவதில்லை. வாய் வியாபாரிகளுக்கு (ஆதவ் அர்ஜுனா) மாமனார் பணம் பின்னால் இருக்கிறது. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். என்னுடைய சொந்த நிறுவனத்தில் இருந்து எனக்கு சம்பளம் வாங்குவதில்லை. என்னுடைய நிறுவனத்தில் 40 சதவீதம் பங்கு எனக்கு இருக்கிறது. ஆனால் அங்கிருந்து சம்பளம் வாங்குவதில்லை என்றார்.

2 வாரத்தில் மாற்றமா?
அண்ணாமலை கூறுகையில், “இரண்டு வாரம் கழித்து எங்கு இருப்பேன், தனி நபராக என்ன செய்வேன் என்பது எனக்கு தெரியாது. ஐபிஎஸ் ரேங்கில் என்னுடைய ரேங்க் 2. சொந்தமாக நின்று நிலைத்து பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். தன்மானம் கொஞ்சம் அதிகம். வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. கூட்டணி குறித்து தலைமை முடிவு எடுக்கும்” என்றார்.

The post அதிமுக கூட்டணி குறித்து பேச விரும்பவில்லை; ஒரு கட்சியை அழித்தால் பாஜவும் அழிந்துவிடும்: அண்ணாமலை பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: