மாணவர்களுடன் உரையாற்றிய போது லண்டனில் மம்தாவிற்கு எதிராக கோஷம்: பாஜக மீது மறைமுக தாக்கு

லண்டன்: லண்டனில் மாணவர்களுடன் மம்தா உரையாற்றிய போது சிலர் கோஷங்களை எழுப்பி வாக்குவாதம் செய்தனர். அதனால் பாஜக மீது அவர் மறைமுகமாக தாக்கினார். இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, நேற்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே உரையாற்றினார். அவர் தனது உரையில், தேசிய ஒற்றுமை, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் மேற்குவங்க அரசின் சாதனைகள் குறித்து பேசினார். இருப்பினும் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது சிலர் கூச்சலிட்டதால் மம்தா பானர்ஜி அதிர்ச்சியடைந்தார்.

மம்தா பானர்ஜி தனது உரையில், ‘நான் இறப்பதற்கு முன் இந்தியா ஒன்றுபட்டிருப்பதைக் காண விரும்புகிறேன். ஒற்றுமையே பலம்; நாம் பிளவுபட்டால் பலவீனமாகிவிடுவோம்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருந்தார். நாட்டில் அதிகரித்து வரும் அரசியல் மற்றும் சித்தாந்த மோதல்கள் கவலையளிக்கின்றன. நான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, ​​யாரிடமும் பாகுபாடு காட்ட முடியாது. எனது ஆட்சியில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது’ என்று மம்தா பேசிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘​​டாடாவின் நானோ திட்டம் மேற்குவங்கத்தில் இருந்து வெளியேறியது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது மம்தா கூறுகையில், ‘நீங்கள் கூறுவது பொய்; டாடாவும், காக்னிசன்ட்டும் மேற்குவங்கத்தில் தொழில் நடத்தி வருகின்றன’ என்றார். மற்றொருவர், ‘கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மம்தா, ‘இந்த விஷயம் அரசியலுடன் தொடர்புடையது அல்ல. இந்த வழக்கு ஒன்றிய அரசிடம் உள்ளது; நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளது. இதுகுறித்து அரசியல் பேச வேண்டாம்’ என்றார். இதற்கிடையே தனது பழைய புகைப்படத்தைக் காட்டி, ‘கடந்த 30-40 ஆண்டுகளாக என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள்.

அவர்கள் (பாஜக, கம்யூனிஸ்ட்) அதில் தோல்வியடையும் போது, ​​இப்படித்தான் போராட்டம் நடத்துகிறார்கள்’ என்று கூறினார். மேலும் ஒருவர், ‘நீங்கள் இந்து விரோதியா?’ என்று கேட்டபோது, ‘நான் எல்லோருக்காகவும் உழைக்கிறேன். 7 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன், அரசிடம் இருந்து ஒரு ரூபாய் கூட ஓய்வூதியமாக வாங்குவதில்லை, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் மேற்குவங்கம் தான் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது கொல்கத்தா நாட்டின் தலைநகராக இருந்தது; இன்றும் கூட அது இந்தியாவின் கலாசார தலைநகராக உள்ளது’ என்றார்.

The post மாணவர்களுடன் உரையாற்றிய போது லண்டனில் மம்தாவிற்கு எதிராக கோஷம்: பாஜக மீது மறைமுக தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: