அதிகாரப்பூர்வ கார் வெடித்து தீப்பிடித்தது; கொலை முயற்சியில் இருந்து தப்பிய ரஷ்ய அதிபர் புடின்: மாஸ்கோவில் பரபரப்பு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அதிகாரப்பூர்வ கார்களில் ஒன்று சாலையில் நின்றிருந்த நிலையில் திடீரென வெடித்து தீப்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அதிபர் புடினை கொல்வதற்கான சதியா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவின் லிப்யான்கா பகுதியில் எப்எஸ்பி உளவுத்துறையின் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் முன்பாக சாலையில் அதிபர் புடினின் அதிகாரப்பூர்வ கார்களில் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கார் திடீரென வெடி சத்தத்துடன் தீப்பிடித்து எரிந்தது. இன்ஜின் பகுதியில் பிடித்த தீ மளமளவென கார் முழுவதும் பற்றியது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை அணைத்தன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிபர் புடின், எப்போதுமே ரஷ்யாவின் தயாரிப்பான லிமோசின் கார்களை மட்டுமே பயன்படுத்துவார். அவரது அவுரஸ் செனட் லிமோசின் கார்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டவை. சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான இந்த கார்களை அதிபர் மாளிகை பராமரித்து வருகிறது. இவற்றில் ஒரு கார் தான் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அந்த சமயத்தில் காரில் யார் இருந்தார்கள் என்பது பற்றி ரஷ்யா தகவல் வெளியிடவில்லை.

இது அதிபர் புடினை கொல்வதற்கான சதித்திட்டமாக இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. உக்ரைனுக்கு எதிரான போரைத் தொடர்ந்து புடினை கொல்ல ஏற்கனவே பலமுறை சதித்திட்டங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இத்தகவலை உக்ரைன் ராணுவ உளவுத்துறை தலைவர் புடானோவே கூறி உள்ளார். எனவே, புடினை கொல்வதற்கான உக்ரைனின் சதித்திட்டமாக இது இருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதுதவிர சமீபகாலமாக ரஷ்யாவின் ராணுவ உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மாஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய அணுசக்தி படைகளின் தலைவர் ஜெனரல் இகோர் கொல்லப்பட்டார். இந்த படுகொலைக்கு உக்ரைன் பொறுப்பேற்றது. எனவே அதிபர் புடினின் கார் தீப்பிடித்ததற்கும் உக்ரைனுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

The post அதிகாரப்பூர்வ கார் வெடித்து தீப்பிடித்தது; கொலை முயற்சியில் இருந்து தப்பிய ரஷ்ய அதிபர் புடின்: மாஸ்கோவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: