முதல் போட்டியில் தோற்ற அணிகளில் வெற்றிப் படிக்கட்டில் காலடி வைப்பது யார்? கொல்கத்தா ராஜஸ்தான் இன்று மோதல்

கவுகாத்தி: ஐபிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. எல்லா அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் ஆடி முடித்துள்ள நிலையில் 2வது சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் இந்த போட்டியில் மோதுகின்றன. தன் சொந்த களமான ஜெய்ப்பூருக்கு பதிலாக முதல் 2 போட்டிகளில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் ராஜஸ்தான் விளையாடுகிறது.

ரியான் பராக் தலைமையில் களம் கண்ட முதல் போட்டியில் ஐதராபாத் அணியிடம் 44 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்றது ராஜஸ்தான். அந்த அணி, பந்து வீச்சில் பலவீனமாக இருந்தாலும், ஐதராபாத்தின் 286 ரன்னை விரட்டியதில் வீரம் காட்டியது. அதன் விக்கெட் கீப்பர்கள் சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல், தவிர ஷிம்ரன் ஹெட்மயர், சுபம் துபே ஆகியோரும் அதிரடியாக விளையாடினர். அதனை இன்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தால் சாம்பியனை மிரட்ட முடியும்.

மேலும், ஜெய்ஸ்வால், நிதிஷ் ராணா, கேப்டன் பராக் ஆகியோர் மட்டுமின்றி, பந்து வீச்சாளர்கள் எல்லோரும் பொறுப்புணர்வு விளையாட வேண்டியிருக்கும். நடப்புத் தொடரின் முதல் போட்டியில் களமிறங்கிய கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் மண்டியிட்டது. அந்தப் போட்டியில் சுனில் நரைன், கேப்டன் ரகானே, ரகுவன்ஷி ஆகியோரின் அதிரடி பலன் இல்லாமல் போனது. அந்த அதிரடியை இந்த ஆட்டத்திலும் அவர்கள் தொடர வேண்டும்.

டி காக், துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர், முக்கியமாக ரஸ்ஸல் , ரிங்கு சிங் ஆகியோரும் அதிரடியாக ஆட வேண்டும். பந்து வீச்சாளர்களிலும் சுனில் நரைன் தவிர, தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா ஆகியோரும் கூடுதல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது கொல்கத்தா. முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த இந்த 2 அணிகளும் இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்க மல்லுக்கட்டும் என்பதால், போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

* நேருக்கு நேர்

* ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் இதுவரை 30 போட்டிகளில் மோதி இருக்கின்றன. அவற்றில் இரு அணிகளும் தலா 14 போட்டிகளில் வெற்றி, தோல்வியை சந்தித்து சம பலத்தை வெளிப்படுத்தி உள்ளன. 2 போட்டிகள் கைவிடப்பட்டன.

* இவ்விரு அணிகளும் மோதிய போட்டிகளில், அதிகபட்சமாக ராஜஸ்தான் 224, கொல்கத்தா 223 ரன் குவித்துள்ளன. குறைந்தபட்சமாக கொல்கத்தா 125, ராஜஸ்தான் 81 ரன் எடுத்துள்ளன.

* இந்த அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ராஜஸ்தான் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

The post முதல் போட்டியில் தோற்ற அணிகளில் வெற்றிப் படிக்கட்டில் காலடி வைப்பது யார்? கொல்கத்தா ராஜஸ்தான் இன்று மோதல் appeared first on Dinakaran.

Related Stories: