பின், சஞ்சுவுடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவிக்கத் துவங்கினர். இவர்கள் சேர்ந்து, 42 பந்துகளில் 82 ரன்கள் குவித்திருந்த நிலையில், நுார் அஹமது வீசிய பந்தில் ரவீந்திராவிடம் கேட்ச் தந்து சஞ்சு (20) அவுட்டானார். அதன் பின், கேப்டன் ரியான் பராக் களமிறங்கினார். அஸ்வின் வீசிய 12வது ஓவரில் நிதிஷ் ராணாவை, எம்.எஸ்.தோனி அற்புதமாக ஸ்டம்பிங் செய்து அவுட்டாக்கினார். ராணா, 36 பந்துகளில் 5 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 81 ரன் எடுத்தார். அவருக்கு பின், துருவ் ஜுரெல் உள் வந்தார். நுார் அஹமது வீசிய 14வது ஓவரின் முதல் பந்தில், பதிரனாவிடம் கேட்ச் தந்து ஜுரெல் (3 ரன்) வெளியேறினார். பின் வந்த, வனிந்து ஹசரங்கா (4 ரன்), ஜடேஜா பந்தில் விஜய் சங்கரிடம் கேட்ச் தந்து, 5வது விக்கெட்டாக அவுட்டானார்.
அதையடுத்து ஷிம்ரோன் ஹெட்மயர் களமிறங்கினார். பதிரனா வீசிய 18வது ஓவரில் பராக் (37 ரன்) கிளீன் போல்ட் ஆனார். பின், ஜோப்ரா ஆர்ச்சர் உள் வந்தார். கலீல் அஹமது வீசிய 19வது ஓவரில் ஆர்ச்சரும் அவுட்டானார். அதையடுத்து, சஞ்சு சாம்சனுக்கு பதில், இம்பாக்ட் மாற்று வீரராக, குமார் கார்த்திகேயா களமிறங்கினார். அடுத்த இரு பந்துகளில் அவர் ரன் அவுட்டானார். பின்னர், மஹீஸ் தீக்சனா உள் வந்தார். பதிரனா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹெட்மயர் (19 ரன்) அவுட்டானார். 20 ஓவர் முடிவில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்தது. சென்னை தரப்பில், நுார் அஹமது, பதிரனா, கலீல் அஹமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களமிறங்கியது.
The post ஐபிஎல் 11வது லீக் போட்டி; ராஜஸ்தான் 182 ரன் குவிப்பு appeared first on Dinakaran.