கோடை வெயில் அதிகரித்து வருவதால் மதிய நேரம் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

* நீர் சார்ந்த உணவுகளை சாப்பிடுங்கள்

கோடை வெயில் அதிகரித்து வருவதால் மதிய நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், நீர்சத்து நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிட வேண்டும் எனவும் கலெக்டர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வெப்பநிலை உயர்வால், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ள நடைமுறைகளை பின்பற்றிட மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இச்சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தினரையும் உயர் வெப்பநிலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொது சுகாதாரத்துறையின் உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கோடை வெயிலின் நேரடி வெப்ப அலைகளில் இருந்து பாதுகாத்திட குடை, தொப்பி உள்ளிட்டவற்றை மக்கள் பயன்படுத்த வேண்டும்.

குறிப்பாக, பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை அத்தியாவசியத் தேவையின்றி பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென தொடர்ந்து அறிவுறுத்துகிறோம். அதேபோன்று, வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், அதிக வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்திட வேண்டும். வெப்பநிலை அதிகரித்து வருவதால், பகல் நேரங்களில் பொதுவெளியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்லக்கூடாது. மேலும், பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமுடன் கண்காணித்துக்கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் சின்னம்மை, தட்டம்மை, பொண்ணுக்கு வீங்கி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழ்நிலையில் குழந்தைகளுக்கு நீர் சார்ந்த உணவு வகைகள் அதிகம் எடுத்துக்கொள்ள செய்ய வேண்டும்.

தேவையேற்பட்டால் மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சை பெறலாம். பொதுமக்கள் கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள அதிக அளவிலான நீர் பருக வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவிலான நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதை தவிர்த்து, அதிக அளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக்கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை பருகலாம். குளிர்ந்த நீரில் குளிப்பது மிகுந்த நன்மையை அளிக்கும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான, தளர்ந்த, கற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மிக முக்கியமாக திறந்த வெளியில் வேலை செய்யும் போது, தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து வேலை செய்ய வேண்டும்.

சூரிய வெப்பம் அதிகமுள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்திற்கு செல்லலாம். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கலாம். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும். மருத்துவ உதவிக்கு 104 என்ற அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

The post கோடை வெயில் அதிகரித்து வருவதால் மதிய நேரம் வெளியில் வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: