பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது.
பொள்ளாச்சியை அடுத்த ஆழியாருக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை வெயலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இதனால், ஜனவரி இறுதி வரை ஆழியார் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் ஆழியாருக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவானது. விடுமுறை நாட்களில் மட்டும் சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு இருந்தது.
இந்த நிலையில் நேற்றும், வெயிலின் தாக்கத்தால் குடும்பத்துடன் வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஒரு சிலர் மட்டும் அணையின் மேல் பகுதியில் அங்குமிங்குமாக சுற்றித்தறிந்தனர்.
மேலும், அணைக்கு முன்பாக உள்ள பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் குறைந்த அளவிலே இருந்தனர். இதனால் பூங்காவின் பெரும் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த மாதம் துவக்கத்தில் ஆழியார் அணைப்பகுதிக்கு தினமும் சுமார் 2500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
ஆனால், கடந்த சில வாரமாக விடுமுறை நாட்களை தவிர பிற நாட்களில், சுற்றுலா பயணிகள் வருகை 1000க்கும் குறைவாக இருந்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் மட்டுமின்றி, பள்ளிகளுக்கு தேர்வு என்பதால், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
The post கோடை வெயிலால் ஆழியார் அணை பூங்காவுக்கு பயணிகள் வருகை குறைந்தது appeared first on Dinakaran.