பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே ஆண்டிபட்டி புதுமடை காலனியை சேர்ந்தவர் எல்லைத்துரை (45). பாஜவை சேர்ந்த இவர் நெசவு தொழில் செய்து வருகிறார். 2018ல் அறிவிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் பாஜ சார்பில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டவர். இவரை கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி பாஜ திண்டுக்கல் மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ் நவம்பர் மாதம் கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
இதில் ஆத்திரமடைந்த எல்லைத்துரை தான் 2001 முதல் கட்சியில் இருப்பதாகவும், முன்னாள் பாஜ மாவட்ட தலைவர் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தன்னை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் கூறி வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளை பதிந்து வந்தார். இந்நிலையில் எல்லைத்துரை சமூக வலைத்தளங்களில் கனகராஜ் தன்னை போனில் மிரட்டியதாக கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த ஆடியோவில் எல்லைத்துரையின் மனைவி குறித்து ஆபாசமாக பேசுவது வெளிவந்தது. இதுகுறித்து எல்லைத்துரை தனது மனைவியுடன், பழநி தாலுகா போலீசில் கனகராஜ் மீது புகார் அளித்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திடமும் புகார் அளித்தார்.
இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு மாவட்ட எஸ்பிக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில், பாஜ முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் பழநி தாலுகா போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். கனகராஜ் மீது பெண்களை அசிங்கமாக பேசுதல், வார்த்தைகளால் மிரட்டுதல், பெண் வன்கொடுமை சட்டம் தொடர்பான 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post கட்சி நிர்வாகியின் மனைவியை ஆபாசமாக திட்டிய பா.ஜ பிரமுகர் கைது appeared first on Dinakaran.