மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களை ஊக்குவிக்கும் வகையில், எல்லை நிர்ணயப் பயிற்சியை முடக்குவதற்காக 1976ல் இயற்றப்பட்ட 42வது திருத்தத்தின்படி, 2000வது ஆண்டு வரை அடுத்த 25 ஆண்டுகளுக்கு எல்லை நிர்ணயப் பயிற்சியை முடக்க அனுமதித்து, அரசியலமைப்பு முன்னதாகவே திருத்தப்பட்டது. இந்தக் காலம் முடிவடைந்ததும், முடக்கத்தை மேலும் 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2026 வரை நீட்டித்து 2002ம் ஆண்டு 84வது திருத்தம் இயற்றப்பட்டது, 2002ல் செயல்படுத்தப்பட்ட முடக்கம் காலாவதியாக உள்ளது, 2026க்குப் பிறகு எல்லை நிர்ணயத்தை செயல்படுத்துவதற்கான ஒரு உத்தியாக, கோவிட்-19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் செய்யப்படவில்லை.
2026க்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவை அவர்கள் பயன்படுத்தினால், மக்களவை இட ஒதுக்கீடு வெகுவாக மாறும். இங்குதான் ஆபத்து உள்ளது. அதிக மக்கள் தொகை வளர்ச்சி உள்ள மாநிலங்கள் அதிக இடங்களைப் பெறும், அதே நேரத்தில் எங்களைப் போன்ற மாநிலங்கள் குறிப்பிடத்தக்க அரசியல் பிரதிநிதித்துவத்தை இழப்போம். தற்போதைய 543 இடங்களை வைத்துக்கொண்டு, 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுபகிர்வு செய்வதன் மூலம் ஒன்றிய அரசு எல்லை நிர்ணயப் பயிற்சியைச் செய்யும். மாற்றாக, இடங்களை 848 ஆக அதிகரிக்கலாம், பின்னர் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு பகிர்ந்தளிக்கலாம்.
இரண்டு சந்தர்ப்பங்களிலும், நாம் நமது பிரதிநிதித்துவத்தை கணிசமாக இழப்போம். தற்போதுள்ள 543ஐ தக்கவைத்து 2026ல் திட்டமிடப்பட்ட, மக்கள்தொகையின் அடிப்படையில் மறுபகிர்வு செய்தால், என்ன நடக்கும்? இங்குள்ள மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் 30 சதவீத எம்.பி.க்களை பங்களிக்கின்றன, மக்களவையில் மொத்தம் 543 இடங்களில் மொத்தம் 163 இடங்களை கொண்டு உள்ளன. எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டால், எங்கள் இடங்கள் 163லிருந்து 133 ஆகக் குறையும், எங்கள் பிரதிநிதித்துவம் 30 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாகக் குறையும்.
கேரளா 8 இடங்களை இழக்கும், இது அவர்களின் தற்போதைய இடங்களில் கிட்டத்தட்ட 40 சதவீதமாகும். இடங்களின் எண்ணிக்கை 848 ஆக அதிகரிக்கப்பட்டால், எங்களுக்கு என்ன கிடைக்கும்? எங்களுக்கு சில கூடுதல் இடங்கள் கிடைக்கக்கூடும், ஆனால், எங்கள் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் மீண்டும் 30 சதவீதத்திலிருந்து 24.7 சதவீதமாகக் குறையும். தமிழ்நாட்டின் நிலையைக் கவனியுங்கள். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 848 இடங்கள் மறுபகிர்வு செய்யப்பட்டால், எங்களுக்கு 61 இடங்கள் கிடைக்க வேண்டும்.
இருப்பினும், 2026ம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட மக்கள் தொகையின்படி, எங்களுக்கு 49 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தமிழ்நாடு மட்டும் சுமார் 12 இடங்களை இழக்கும், கேரளா சுமார் 11 இடங்களை இழக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா இணைந்து சுமார் 11 இடங்களை இழக்கும், மேலும் இங்கு இருக்கும் 7 மாநிலங்கள் ஒரு அணியாக மொத்தம் 44 இடங்களை இழக்கும். எனவே, இங்குள்ள சாத்தியமான அச்சுறுத்தல்கள் என்ன? எல்லை நிர்ணயம் சில மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தை நியாயமற்ற முறையில் அதிகரிக்கும், அதே நேரத்தில் நமது தற்போதைய பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற சில மாநிலங்களுக்கு தேவையற்ற நன்மையை அளிக்கும்.
இங்குள்ள 7 மாநிலங்கள் 65 இடங்களைப் பெற உள்ளன, மேலே குறிப்பிடப்பட்ட நான்கு மாநிலங்கள் கூடுதலாக 150 இடங்களைப் பெறும். விவசாயம், தொழில்கள், வேலைவாய்ப்புகள், வட்டாரத்தின் வளர்ச்சி தொடர்பான தேசியக் கொள்கைகள் சில மாநிலங்களால் ஆணையிடப்படலாம், நமது தேவைகள் ஒதுக்கி வைக்கபடலாம். 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களுக்கான முடக்கத்தை 2026க்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என்று நாம் கோர வேண்டும்.
இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் பராமரிக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும். இது எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைப் குறித்தது மட்டுமல்ல இது இந்தியாவில் ஜனநாயகத்தின் எதிர்காலத்தைப் பற்றியது எனவே நாம் ஒன்றாக நிற்போம். நமது குரல்களை எழுப்புவோம், நமது பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நீதியை உறுதி செய்யும் நியாயமான எல்லை நிர்ணய செயல் முறைக்காக போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
* 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களவை இடங்களுக்கான முடக்கத்தை 2026க்கு பிறகும் நீட்டிக்க வேண்டும் என்று நாம் கோர வேண்டும். இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் பராமரிக்கப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும். இது எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை குறித்தது மட்டுமல்ல இது இந்தியாவில் ஜனநாயகத்தின் எதிர்காலத்தைப் பற்றியது.
The post மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போதைய விகிதாச்சார பிரதிநிதித்துவம் பராமரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.