அதேபோல், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் 1971ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும். அதேபோல் நாடாளுமன்றத்தில் மகளிருக்கான மசோதா நிறைவேற்றப்பட்டபின், அப்போது தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின் நடைமுறைக்கு வரும் என்று தெளிவாக கூறியுள்ளனர். அதாவது விரைவில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 33 சதவிகிதம் மகளிருக்கான இடஒதுக்கீடு மகளிருக்கு தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது கூட, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராது என்று கூறினார். அவரின் பதில் தெளிவாக இல்லாமல் குழப்பமாக அமைந்திருக்கிறது. அதேபோல் நாங்கள் வடக்கு, தெற்கு என்று பிரிவினையை ஏற்கவில்லை. நாங்கள் எங்களின் உரிமையை மட்டுமே கேட்கிறோம். எங்களின் உரிமையை கேட்பது உங்களுக்கு எதிராக பேசுவது அல்ல. ஆனால் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் சிலர் பாதிப்பை சந்திக்கவும், சிலர் ஆதாயம் அடைவதையும் ஏற்க முடியாது.
நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே நாங்கள் அனைவரும் கோரியுள்ளோம். மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியவர்கள் பாதிப்புகளை சந்திக்க கூடாது என்பதே எங்களின் நோக்கம். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்கள் பாதிப்பை சந்திக்க கூடாது. இதனால் 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைக்க கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தொடர் நடவடிக்கைகளுக்கான குழு அமைக்கப்படும்.
அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்படும். அதேபோல் தமிழக பாஜ மட்டுமல்லாமல் தேசிய பாஜவும் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்துகளை தான் முன்வைத்து வருகிறார்கள். நிதி, மாநில உரிமை தொடர்பாக தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் உள்ளோம். நமது பிரதிநிதித்துவம் குறைந்தால் இன்னும் பிரச்னைகள் வரும். பாஜ தமிழக மக்களுக்கும், தமிழ் உணர்வுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதிரானவர்கள். அந்த நிலைப்பாட்டையே எடுத்துள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
The post நியாயமான தொகுதி மறுசீரமைப்பையே கோரியுள்ளோம்: கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.