பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரம்ஜான் பண்டிகையொட்டி விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. இதில், ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் உள்ள மாட்டு சந்தைக்கு, கடந்த மாதம் துவக்கத்தில் மாடுகள் வரத்து ஓரளவு இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால், தொடர்ந்து மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதன்பின் இந்த மாதம் துவக்கத்திலிருந்து புனிதவெள்ளி நோன்பு மற்றும் ரம்ஜான் நோன்பு கடைபிடிப்பால் மாடுவரத்து குறைவாக இருந்ததுடன், அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவால், விற்பனை மந்தமானது. இந்நிலையில், இன்று நடைபெற்ற சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவு மாடுகள் வரத்து இருந்தது.
ரம்ஜான் நோன்பு நிறைவடையும் நிலையில் இருப்பதால், மாடுகளை வாங்கிச் செல்ல சந்தைக்கு கேரளா வியாபாரிகள் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால், விற்பனை விறுவிறுப்பானதுடன், அனைத்து ரக மாடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையானது. இதில் எருமை மாடு ரூ.50 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.40 ஆயிரம் வரையிலும், காளை மாடு ரூ.60 ஆயிரம் வரையிலும், ஆந்திர காளை மாடு ரூ.70 ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.20 ஆயிரம் என கூடுதல் விலைக்கு விற்பனையானது. கடந்த வாரம் ரூ.1.70 கோடி வரை வர்த்தகம் இருந்தது. ஆனால், இன்று நடந்த சந்தையில் ஒரே நாளில், ரூ.3 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் பொள்ளாச்சி மாட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம் appeared first on Dinakaran.