ஐதராபாத்: ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 2வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 44 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன் குவித்தது. இஷான் கிஷன் 106, டிராவிஸ் ஹெட் 67 ரன் அடித்தனர். பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது. இஷான்கிஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றி குறித்து சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறுகையில், “நான் நிச்சயமாக எங்கள் வீரர்களுக்கு பந்து வீசுவதை விரும்ப மாட்டேன்.
நம்பவே முடியவில்லை, 280 ரன் குவித்தோம். இது நிச்சயம் பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்கும் என்று நன்றாகவே தெரியும். ஆனால் இவ்வளவு பெரிய ரன்கள் குவித்தபோது ஒரு ஓவரில் வெற்றி பெற வைக்க முடியும். இஷான் கிஷன் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. நாங்கள் இந்த தொடரில் சுதந்திரமாக விளையாட முயற்சி செய்கிறோம். எங்களின் தயாரிப்பு அற்புதமாக இருந்தது. அற்புதமான பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். இந்த வருடம் முழுவதும் எப்படி ஆட வேண்டும் என்று ஒரு ப்ளூ பிரிண்ட் வைத்திருக்கிறோம்’’ என்றார்.
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்காக முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்ற ஆட்டநாயகன் இஷான் கிஷன் கூறுகையில், “உண்மையைச் சொல்லப் போனால், பதற்றம் இருந்தது. நான் அதை மறுக்க மாட்டேன். பாட் மற்றும் பயிற்சியாளர் நிறைய நம்பிக்கை அளித்தனர். நான் மிகவும் கடினமாக பயிற்சி செய்து தயாரானது மிகவும் நன்றாக இருந்தது, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அபிஷேக் மற்றும் ஹெட் ஆட்டத்தை பார்த்தால் நம்பிக்கை கிடைக்கும்’’ என்றார்.
The post ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சன்ரைசர்ஸ்; கேப்டன், பயிற்சியாளர் நிறைய நம்பிக்கை அளித்தனர்: ஆட்டநாயகன் இஷான் கிஷன் பேட்டி appeared first on Dinakaran.