திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளாக நடைபெறாத பாரம்பரிய தெப்பத்தேர் திருவிழா இந்தாண்டு நடைபெறுமா?

*பக்தர்கள் எதிர்பார்ப்பு

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பாரம்பரியமான தெப்பத்தேர் திருவிழா, இந்த வருடமாவது நடைபெறுமா? என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் பித்தா பிறைசூடி பெருமானே எனும் புகழ்பெற்ற பாடல் தளமான ஸ்ரீ மங்களாம்பிகை கிருபாபுரீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் நடைபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவின்போது கிருபாபுரீஸ்வரர் கோயிலுக்கும், சீனிவாச பெருமாள் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ள கிருபாபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் பாரம்பரியமான முறையில் கிருபாபுரீஸ்வரர் சுவாமிக்கு தெப்ப தேரில் அலங்காரம் செய்யப்பட்டு குளத்தில் உள்ள நீரில் சுவாமி மிதந்து வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த திருவிழா என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகவும் கோலாகலமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை தெப்பக்குளத்தின் கரையில் உள்ள கருங்கற்கள் சரிந்து சேதம் அடைந்ததால் குளத்தில் நீர் தேங்கி துர்நாற்றம் வீசிய நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துர்நாற்றம் வீசிய நீரை வெளியேற்றிவிட்டு ரூபாய் 96 லட்சம் மதிப்பீட்டில் தெப்பக்குளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. ஆனால் குளம் புனரமைக்கப்பட்ட தேதியிலிருந்து இந்த ஆண்டு வரை தெப்பத்தேர் திருவிழா நடைபெறவில்லை.

ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் தெப்ப திருவிழா நடைபெறுவதாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் விழா அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதுவரை இங்கு தெப்பத்தேர் திருவிழா நடைபெறவில்லை.

கிருபாபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் மற்றும் திருமண மண்டபம் உள்ளிட்ட வருவாய் கொடுக்கக்கூடிய சொத்துக்கள் இருந்தும் ஏன் திருவிழாவை அறநிலையத்துறை அதிகாரிகள் நடத்தவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கோயிலுக்கு போதிய அளவில் வருவாய் இருந்தும் அறநிலையத்துறை செலவுகளை கணக்கு காட்டுவதற்காக தெப்பத்தேர் திருவிழா நடப்பதாக அழைப்பிதழில் குறிப்பிடுகின்றனரா என்ற சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே பாரம்பரியமிக்க இந்த தெப்பத் தேர் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயிலில் 25 ஆண்டுகளாக நடைபெறாத பாரம்பரிய தெப்பத்தேர் திருவிழா இந்தாண்டு நடைபெறுமா? appeared first on Dinakaran.

Related Stories: