வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த கலால்துறை முன்னாள் அதிகாரி மனைவிக்கு 4 ஆண்டு சிறை

மதுரை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், கலால் துறை முன்னாள் சூப்பிரண்டு, அவரது மனைவி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது. திருச்சியில் ஒன்றிய கலால் துறையில் சூப்பிரண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் கோவிந்தசாமி (66). இவர் கடந்த 1.1.2002 முதல் 23.2.2012 வரை தூத்துக்குடியில் பணிபுரிந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 10 லட்சம் வரை சொத்து குவித்ததாக கோவிந்தசாமி, அவரது மனைவி கீதா ஆகியோர் மீது சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த மதுரை சிபிஐ நீதிமன்றம் கணவன், மனைவி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:

லஞ்சம் மனிதனை குருடனாக்குகிறது. லஞ்சம் பெறுபவர்களின் குடும்பத்தினரும் இதனால் பாதிக்கப்படுவர். அப்பாவி மக்களின் நியாயமான காரணத்தை நாசமாக்குகிறது. இந்த வழக்கில் கணவன், மனைவி ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் சிபிஐ நிரூபித்துள்ளது. எனவே அவர்கள் இருவரையும் விடுதலை செய்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் கோவிந்தசாமி, அவரது மனைவி கீதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், முறையே ரூ.75 ஆயிரம், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

கோவிந்தசாமி கண் அறுவை சிகிச்சைக்கு பதிவு செய்துள்ளார். அவரை உடனிருந்து கவனிக்க கீதாவை தவிர வேறு யாரும் இல்லை. இதனால் இருவருக்கும் மதுரை சிறைக் கண்காணிப்பாளர் ஏப்ரல் 10ம் தேதி வரை பரோல் வழங்க வேண்டும். பரோல் முடிந்தவுடன், அதாவது வரும் 10ம் தேதி மாலை இருவரும் சிறையில் சரணடைய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

The post வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த கலால்துறை முன்னாள் அதிகாரி மனைவிக்கு 4 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: