மதுரை விமான நிலையத்தில் பிடிபட்ட அரிய வகை உயிரினங்கள் பாங்காக் அனுப்பி வைப்பு

அவனியாபுரம்: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு, மதுரை விமான நிலையத்தில் பிடிபட்ட 64 அரிய வகை வன உயிரினங்கள் பாங்காக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இலங்கை தலைநகர் ெகாழும்புவில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மதுரைக்கு தினசரி இயக்கப்படுகிறது. கடந்த 19ம் தேதி கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வேலூரை சேர்ந்த சசிக்குமார் என்பவர் ெகாண்டு வந்த பெட்டியில், இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8 என 64 வன உயிரினங்கள் கொண்டு வந்ததை சுங்க இலாகாவினர் கண்டுபிடித்தனர். இவை அனைத்தும் தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து சசிக்குமாரிடம் சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொழும்பு விமான நிலையத்திற்குள் செல்லும்போது அங்கு வந்த ஒரு நபர், தன்னிடம் ஒரு பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும், அதை மதுரை விமான நிலைய வாயிலில் காத்திருக்கும் நபரிடம் கொடுக்குமாறு கூறியதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சசிக்குமாரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். கொழும்புவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை வன உயிரினங்களை இந்திய வன விலங்கு சட்டத்தின்படி நீதிமன்றம் மூலம் உரிய வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், பறிமுதல் செய்ய 64 அரியவகை உயிரினங்களும் இந்திய வனத்துறை சட்டத்தின் கீழ் இல்லாத உயிரினங்கள் என்பதால், அவற்றை இங்கேயே வைத்துக் கொள்வதில் சட்ட சிக்கல்கள் எழுந்தது.

இதையடுத்து இந்த அரியவகை உயிரினங்கள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டதோ, அங்கேயே திருப்பி அனுப்ப சுங்கத் துறையினர் முடிவு செய்தனர். இதன்படி, அரிய வகை வன உயிரினங்கள் பாதுகாப்பாக பெட்டியில் அடைக்கப்பட்டன. பின்னர் மீண்டும் மதுரை விமான நிலையத்தில் இருந்து லங்கன் ஏர்லைன்ஸ் மூலம் கொழும்பு வழியாக பாங்காக்கிற்கு நேற்று பத்திரமாக சுங்கத்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டது.

The post மதுரை விமான நிலையத்தில் பிடிபட்ட அரிய வகை உயிரினங்கள் பாங்காக் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: