ஊட்டி: செல்போன் திருட்டு புகார் குறித்து விசாரித்தபோது போலீசார் தாக்கியதாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எமரால்டு லாரன்ஸ் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சிவனய்யா என்ற குமார் (48). இவருடைய மனைவி சந்திரா தேவி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள். நேற்று முன்தினம் குமார், லாரன்ஸ் பகுதியில் இருந்து எமரால்டில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல லாரி ஒன்றில் லிப்ட் கேட்டு சென்றார்.
அவர் லாரியில் இருந்து இறங்கிய பின்னர், டிரைவரின் செல்போனை காணவில்லை எனக் கூறப்படுகிறது. அப்போது மருத்துவமனைக்கு சென்று வந்த குமாரை, அந்த லாரி டிரைவர் பிடித்து கேட்டபோது அவர் மறுத்துள்ளார். லாரி டிரைவர் இது குறித்து எமரால்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து குமாரை, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அங்கு விசாரணை நடத்தினர்.
அப்போது அவரை போலீசார் தாக்கியதாகவும், உடனடியாக செல்போனை ஒப்படைக்காவிட்டால் கைது செய்வோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. வீட்டிற்கு சென்ற குமார், மலைக்காய்கறிகளுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை குமார் உயிரிழந்தார். குமாரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post செல்போன் திருட்டு புகார் போலீசார் தாக்கியதாக தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.