நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் தொன்மையின் அடையாளமாக திருக்கோயில்கள் திகழ்கின்றன. திருக்கோயில்களின் நிர்வாகம், மன்னர்கள் அளித்த கொடைகள், திருக்கோயில்களின் சொத்துகள் குறித்த விபரங்கள் போன்றவை காகித பயன்பாடு வருவதற்கு முன்பாக பனைவோலைகளே ஆவணங்களாக இருந்துள்ளன. இவ்விவரங்களை வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் தற்கால தமிழுக்கு மாற்றம் செய்து நூலாக்கம் செய்திட இந்து சமய அறநிலையத்துறையின் நிதியுதவியில் உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் தலைமையிலான வல்லுநர் குழுவினரால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இதுவரை 979 திருக்கோயில்களில் கள ஆய்வு செய்யப்பட்டு, 31 திருக்கோயில்களிலிருந்து 2,12,585 ஓலைச்சுவடிகள், 22 செப்பேடுகள், 67 செப்பு பட்டயங்கள், 2 வெள்ளி ஏடுகள், ஒரு தங்க ஏடு மற்றும் 365 இலக்கிய சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 26,734 சுவடிகள் அறிவியல் முறைப்படி பராமரிக்கப்பட்டுள்ளதோடு, நூலாக்கம் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் வட்டம், கொரட்டி, அருள்மிகு காளத்தீஸ்வரர் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின் போது இத்திருக்கோயிலின் இராஜகோபுரத்தில் இருந்த ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்போதைய ஸ்தபதியால் திருடப்பட்டுள்ளது. இவற்றை மீட்டு தனிநபர் ஒருவர் பாதுகாத்து வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் திருப்பத்தூர் சரக ஆய்வாளரால் நேற்று (18.03.2025) மாலை திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சுமார் 500 ஓலைகள் கொண்ட மூன்று ஓலைச்சுவடி கட்டுகளும், சுமார் 600 ஓலைகள் கொண்ட இரண்டு ஓலைச்சுவடி கட்டுகளும், புலி மற்றும் அரசன் உள்ள தனி ஓலை என ஆகமொத்தம் ஐந்து ஓலைச்சுவடி கட்டுகள் மற்றும் ஒரு ஓலை தனி ஓலை சுவாதீனம் பெறப்பட்டு திருக்கோயில் செயல் அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள், கண்டறியப்பட்ட ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்து அறிக்கை அளித்திட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை முதுநிலை ஆராய்ச்சியாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் அவர்கள் தலைமையிலான வல்லுநர் குழுவினருக்கு உத்தரவிட்டார்.
The post காளத்தீஸ்வரர் கோயில் ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்ய உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறைக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவு appeared first on Dinakaran.