286 நாட்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்: புளோரிடா கடல் பகுதியில் விண்கலம் பத்திரமாக இறங்கியது; 3 வீரர்களும் உடன் வந்தனர்

கேப் கனாவெரல்: விண்வெளியில் 286 நாட்கள் சிக்கித்தவித்த இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். அவருடன் 3 வீரர்கள் வந்த டிராகன் விண்கலம் புளோரிடா கடலில் பத்திரமாக இறங்கியது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், போயிங் நிறுவனமும் இணைந்து தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலம் மூலம் இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்சும் (59 வயது), அமெரிக்க கடற்படை விமானியான புட்ச் வில்மோரும் (62 வயது) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி அனுப்பப்பட்டனர்.

ஸ்டார்லைனர் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி சோதிக்கும் முயற்சியாக இப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், வெறும் 8 நாள் பயணமாக சுனிதா வில்லியம்ஸ் அனுப்பப்பட்டார். ஆனால், ஸ்டார்லைனரில் கோளாறு ஏற்பட்டதால், அந்த விண்கலம் மட்டும் கடந்த செப்டம்பர் 7ம் தேதி தனியாக பூமிக்கு திரும்பியது. சுனிதாவும், வில்மோரும் பல மாதங்கள் விண்வெளி மையத்தில் தங்க வேண்டியதானது. இவர்கள் இருவரும், பிப்ரவரியில் பூமிக்கு திரும்பும் ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் மூலம் மீட்கப்படுவார்கள் என நாசா அறிவித்தது.

சில தொழில்நுட்ப குறைபாடுகளால் டிராகன் விண்கலம் ஏவப்படுவது தாமதமானதால் சுனிதா, வில்மோர் இருவரும் மேலும் ஒரு மாதம் விண்வெளியில் தங்க வேண்டியதானது. இதைத் தொடர்ந்து, டிராகன் விண்கலம் மூலம் கடந்த 16ம் தேதி க்ரூ-10 குழுவினர்களான 4 வீரர்களுடன் விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. புதிய குழுவிடம் பணியை ஒப்படைத்த சுனிதா, வில்மோர் உள்ளிட்ட 4 வீரர்களும் பூமிக்கு திரும்ப தயாராகினர். அதன்படி, 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோருடன் மற்ற 2 வீரர்கள் டிராகன் விண்கலம் மூலம் நேற்று முன்தினம் காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டனர்.

சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் இருந்து 408 கிமீ தொலைவில் இருந்தாலும், பூமியில் தனது இலக்கை துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் அடைய டிராகன் விண்கலம் 17 மணி நேரம் பயணம் மேற்கொண்டது. புளோரிடாவின் பான்ஹேண்டிலில் உள்ள டல்லாஹஸ்ஸி பகுதியில் அமெரிக்கன் வளைகுடா கடலில் டிராகன் காப்ஸ்யூலை இறக்க ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. இவ்வாறு விண்கலத்தை கடலில் இறங்கி தரையிறக்கும் செயல்முறை ஸ்ப்ளாஷ்டவுன் எனப்படும். இதில், விண்கலம்கள் புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைகின்ற மறுநுழைவு தான் மிகவும் ஆபத்தான கட்டமாகும்.

இந்த ஆபத்தான கட்டத்தை தாண்டி, சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டுமென இந்தியாவில் உள்ள அவரது பூர்வீக கிராம மக்களும் அமெரிக்காவில் உறவினர்களும் வேண்டிக் கொண்டனர். டிராகன் விண்கலத்தின் வருகையை நாசாவும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை டிராகன் விண்கலத்தின் புவி வளிமண்டல மறுநுழைவு நிகழ்வுகள் தொடங்கின. அந்த சமயத்தில் 27,000 கிமீ வேகத்தில் இறங்கிய விண்கலத்தை சுற்றி சுமார் 1950 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்தது. இதனால் விண்கலத்திற்கும் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு சிறிது நேரம் துண்டிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பாராசூட் மூலம் விண்கலத்தின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. இறுதியாக அதிகாலை 3.27 மணிக்கு விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பத்திரமாக கடலில் மிதக்க வைக்கப்பட்டது. விண்கலத்தின் குளிர்விப்புக்காக சுமார் ஒரு மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு, மீட்பு படகில் இருந்த மீட்பு படையினர் விண்கலத்தின் கதவை திறந்து வீரர்களை மீட்டனர். சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 வீரர்களுடன் உற்சாகமாக வெளியில் வந்து பூமிக் காற்றை சுவாசித்தபடி, கையசைத்தபடியே உற்சாகத்துடன் வந்தனர். பல மாதங்கள் விண்வெளியில் இருந்ததால் அவர்களால் உடனடியாக எழுந்து நடக்க முடியாது என்பதால் சக்கர நாற்காலி மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து சுனிதா உட்பட 4 வீரர்களும் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு 45 நாள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள். நீண்ட கால விண்வெளி பயணங்கள் உடலை பாதிக்கின்றன. எனவே, புவி ஈர்ப்பு விசையுடன் வாழ்வதற்கு மீண்டும் பழகுவதால் விரிவான உடற்பயிற்சிகள் அவசியம். இவை முடிந்த பிறகு 4 வீரர்களும் வீடு திரும்புவார்கள். வெறும் 8 நாள் பயணமாக விண்வெளிக்கு சென்று, எதிர்பாராத விதமாக 286 நாட்கள் தங்கி ஆய்வுப்பணிகளை செய்து, பத்திரமாக பூமிக்கு திரும்பி புதிய சாதனை படைத்திருக்கும் சுனிதா வில்லியம்சுக்கு ஜனாதிபதி திரவுபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், சினிமா பிரபலங்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே வாழ்த்து தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டப்பேரவைகளிலும் சுனிதா வில்லியம்சுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாதனை மங்கை
விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக மணிநேரம் செலவழித்த பெண் ஆகிய சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். இது சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளிப் பயணம். மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக 9 முறை அவர் விண்வெளியில் நடந்துள்ளார். அதாவது மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக நேரம் விண்வெளியில் நடந்த பெண் என்ற சாதனையை சுனிதா படைத்துள்ளார்.

* விண்வெளியில் என்ன செய்தார்?
சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் பல்வேறு ஆராய்ச்சி பணிகளுக்கு உதவி உள்ளனர். விண்வெளி ஆய்வு மையத்தை பராமரிப்பதிலும், சக பணியாளர்களுக்கு அன்றாட நடவடிக்கைகளில் உதவுவதிலும், தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்வதிலும் முக்கிய பங்காற்றினர். மொத்தம் 900 மணி நேரம் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார். இதில் 150 பரிசோதனைகளை செய்துள்ளார். ஜனவரி நடுப்பகுதியில் சக விண்வெளி வீரர் நிக் ஹேக்குடன் சுனிதான வில்லியம்ஸ் பழுது பார்க்கும் பணிக்காக விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே சென்றார். அதே மாதத்தின் இறுதியில் சுனிதாவும் வில்மோரும் இணைந்து விண்வெளி நடையை மேற்கொண்டனர்.

அதுமட்டுமின்றி ஈர்ப்பு விசையே இல்லாத விண்வெளியில் எதிர்பாராத விதமாக நீண்ட காலம் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அதற்காக உடல் ரீதியாக தயார்படுத்துவதற்கான விண்வெளி உடற்பயிற்சிலும் தினமும் சுனிதா ஈடுபட்டார். விண்வெளியில் இருந்தபடியே அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார். வில்மோருடன் இணைந்து கடந்த செப்டம்பரில் செய்தியாளர்கள் சந்திப்பையும் நடத்தினார். சுனிதா உட்பட 4 வீரர்களும் விண்வெளி மையத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர்.

விண்வெளியில் சுனிதா தங்கியிருந்த 286 நாட்களில் பூமியை 4,576 முறை சுற்றி வந்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையம் ஒரு நாளில் 16 முறை பூமியை சுற்றி வரும். இதனால் ஒவ்வொரு ஒன்றரை மணி நேரத்திற்கு ஒருமுறை சூரிய உதயம் அல்லது சூரிய அஸ்தமனத்தை பார்த்துள்ளார். ஸ்ப்ளாஷ்டவுன் நேரத்தில் மட்டுமே 195 மில்லியன் கிமீ பயணம் செய்துள்ளார். மேலும், 8 நாளில் முடிக்க வேண்டிய பணியை 9 மாதமாக நீட்டிக்க வேண்டிய சவாலை நாசா வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. இதற்காக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தங்கள் உயிரையே பணயம் வைத்து மகத்தான முன்னுதாரணமாகி உள்ளனர்.

* எப்படிப்பட்டவர் சுனிதா?
அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ், சிறு வயதிலிருந்தே அறிவியலில் ஆர்வம் கொண்டவர். ஆனாலும், அவரது கனவு கால்நடை மருத்துவராக வேண்டும் என்பதுதான். ஒருசமயம், சகோதரர் ஜேவை பார்க்க அமெரிக்க கடற்படை அகாடமிக்கு சென்ற போது, தானும் கடற்படை அதிகாரியாக வேண்டுமென ஆசை சுனிதாவுக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடின முயற்சியுடன் கடற்படை விமானப்படை விமானி ஆனார். சுனிதாவுக்கு போர் விமானங்கள் ஓட்டுவதே லட்சியமாக இருந்தது. ஆனால் அவருக்கு கிடைத்ததோ கடற்படை ஹெலிகாப்டர்தான். 1989ம் ஆண்டு, அவர் வெர்ஜீனியாவின் நோர்போக்கில் உள்ள ஹெலிகாப்டர் காம்பாட் சப்போர்ட் ஸ்குவாட்ரான் 8ல் பணியாற்றினார். துருப்புக்களை கொண்டு செல்வதிலும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகித்தார்.

அவரது தலைமைத்துவ திறன்கள், அர்ப்பணிப்பு ஆகியவை சுனிதாவை விண்வெளி வீரராக்கியது. 1998ல் நாசாவால் விண்வெளி வீரராக சுனிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான்சன் விண்வெளி மையத்திலும், ரஷ்யாவின் மாஸ்கோவிலும் பயிற்சி பெற்றார். டிசம்பர் 9, 2006ல் தனது முதல் விண்வெளிப் பயணத்தில் 195 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுப் பணி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, 2012 ஜூலை 17ல் 2வது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அப்போது 4 மாதங்கள் தங்கியிருந்தார். தற்போது 3வது முறையாக விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளார். 2007 மற்றும் 2013க்கு இடையே 3 முறை இந்தியாவுக்கு சுனிதா வில்லியம்ஸ் வந்துள்ளார். அவரது மகத்தான விண்வெளி சேவையை பாராட்டி, 2008ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

* மூன்றாவதாக வந்த சுனிதா
டிராகன் விண்கலம் ஸ்ப்ளாஷ்டவுனுக்குப் பிறகு, அதிலிருந்து முதல் நபராக க்ரூ-9 தளபதியும் அமெரிக்க விண்வெளி வீரருமான நிக் ஹேக் வெளியில் வந்தார். அவரைத் தொடர்ந்து ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் அழைத்து வரப்பட்டார். மூன்றாவதாக சுனிதா வில்லியம்ஸ் புன்னகையுடன் கையசைத்தபடி உற்சாகமாக வெளியே வந்தார்.

* சொன்னதை செய்த டிரம்ப்
சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் முன்னாள் அதிபர் பைடன் நிர்வாகம் அலட்சியமாக நடந்து கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் குற்றம்சாட்டியது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சுனிதா, வில்மோரை பூமிக்கு அழைத்து வரும் பணியை விரைவுபடுத்த அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இந்நிலையில், வெள்ளைமாளிகை நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘வாக்குறுதி அளிக்கப்பட்டது, வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது: 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்காவில் பாதுகாப்பாக தரையிறங்கினர், எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசாவுக்கு நன்றி’ என கூறப்பட்டுள்ளது.

* சொந்த ஊர் மக்கள் நிம்மதி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் சிரித்த முகத்துடன் டிராகன் விண்கலத்தில் இருந்து வெளியில் வந்த காட்சிகளைப் பார்த்த பிறகுதான், அவரது பூர்வீக கிராமமான ஜூலாசன் மக்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்துள்ளது. சுனிதாவின் தந்தை பிறந்த குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்தினர் இந்த மகிழ்ச்சியை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஊரே விழாக்கோலம் பூண்டு சந்தோசத்தில் திளைத்துள்ளது. கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து நாசாவில் பணிபுரியும் இரண்டாவது இந்திய வம்சாவளி அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003ல் கல்பனா சாவ்லா விண்வெளியில் இருந்து திரும்பிய போது அவரது விண்கலம் தரையிறங்கியதும் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா பலியானார்.

* வாழ்த்திய டால்பின்கள்
டிராகன் விண்கலம் புளோரிடா கடலில் இறங்கிய பிறகு குளிர்விப்புக்காக காத்திருந்த சமயத்தில் சில டால்பின்கள் விண்கலத்தை சுற்றி வலம் வந்தன. இது பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 வீரர்களை உலக மக்கள் மட்டுமின்றி டால்பின்கள் வாழ்த்து தெரிவித்தது போல் இருந்தது.

* 140 கோடி இந்தியர்களுக்கும் நிம்மதி
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வாழ்த்தில், ‘‘பூமிக்கு மீண்டும் வருக, சுனிதா வில்லியம்ஸ்! இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக, நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் நீங்கள் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் திரும்பியதற்கு எங்கள் அன்பான பாராட்டுகளையும், மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நீட்டிக்கப்பட்ட பயணத்தின் பாதுகாப்பான முடிவு, உங்கள் சாதனைகளில் மிகுந்த பெருமை கொள்ளும் 140 கோடி இந்தியர்களுக்கும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது’’ என்றார்.

* ‘இந்தியாவின் மகள் சுனிதா’தலைவர்கள் வாழ்த்து மழை
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்சுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘‘இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக விண்வெளி வீரர்கள் தங்கள் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் மனஉறுதியால் அனைவரையும் ஊக்கப்படுத்தியுள்ளனர். அவர்களின் வரலாற்றுப் பயணம் உறுதிப்பாடு, குழுப்பணி மற்றும் அசாதாரண தைரியத்தின் உதாரணம். அவர்களின் அசைக்க முடியாத உறுதியை வணங்குகிறேன். அவர்களுக்கு சிறந்த ஆரோக்கியம் பெற வாழ்த்துகிறேன்’’ என்றார்.

பிரதமர் மோடி தனது வாழ்த்தில், ‘‘சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் குழுவினர் மீண்டும் ஒருமுறை விடாமுயற்சி என்றால் என்ன என்பதைக் காட்டியுள்ளனர். விண்வெளி ஆய்வு என்பது மனித ஆற்றலின் வரம்புகளை தாண்டிச் செல்வது, கனவு காணத் துணிவது மற்றும் அந்த கனவுகளை நிஜமாக மாற்றும் தைரியத்தைக் கொண்டிருப்பதாகும். இந்த உணர்வை சுனிதா வில்லியம்ஸ் தனது வாழ்க்கை முழுவதும் வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறோம். துல்லியத்துடன் ஆர்வமும், தொழில்நுட்பத்துடன் விடாமுயற்சியும் இணையும்போது என்ன நடக்கும் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளனர்’’ என்றார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தனது வாழ்த்து செய்தியில், ‘‘சர்வதேச விண்வெளி நிலையத்தில் நீண்ட பயணத்திற்கு பிறகு நீங்கள் பாதுகாப்பாக திரும்பிய குறிப்பிடத்தக்க சாதனை. நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கான அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று. சுனிதாவின் விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும் விண்வெளி விஞ்ஞானிகளையும், ஆர்வலர்களையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் சிரஞ்சீவி, மாதவன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

The post 286 நாட்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்: புளோரிடா கடல் பகுதியில் விண்கலம் பத்திரமாக இறங்கியது; 3 வீரர்களும் உடன் வந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: