நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணைக்கு உகந்ததா என்ற விளக்கங்களை கேட்டு கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விசாரணைக்காக தான் இதுதொடர்பாக திருத்தமனுவை நாங்கள் தாக்கல் செய்கிறோம் என குறிப்பிட்டார். மேலும், நீதிபதிகள் மாநில அரசு அனுமதிபெற்று தானே விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மனுவில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்கள். தொடர்ந்து பேசிய பி.எஸ்.ராமன் அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
அதே போல் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் டெல்லியில் இருந்து வந்த மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவ்திரி ஆஜராகி வாதிட்டார். சட்டவிரோத பணப்பரிவர்தனை சட்டப்பிரிவு 17ன் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரின் சோதனை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றும் குற்றம் மூலம் பணம் மீட்கப்பட்டு சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேக படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக எந்த அதிகாரிக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அமலாக்கத்துறை பிரிவு 17ன் படி எல்லா இடங்களிலும் ஆதாரங்கள் இல்லாமல் விசாரணை நடத்த முடியுமா என்ற கேள்வியையும் முன்வைத்தார். 60 மணி நேரம் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை சட்ட விரோதமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளதாகவும் குற்றசாட்டை முன்வைத்தார். 3 நாட்களாக அதிகாரிகளை வெளியே விடவில்லையா என்று நீதிபதிகள் குறிப்பிட்டு கேட்டபோது பெண் அதிகாரிகள் காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை சிறைபிடிக்கப்பட்டதாகவும் அதிகாலை 1 மணிக்கு பிறகு சிலரை வெளியில் செல்ல அனுமதித்துவிட்டு காலை 10 மணிக்கு திரும்ப வர வேண்டும் என்று அமலாக்கத்துறை நிபந்தனை வைத்ததாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அந்த வாதத்தை விளக்கினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், எதற்காக சோதனை நடத்தப்படுகிறது என அவர்களுக்கு தெரியப்படுத்தினீர்களா, இரவு நேரத்திலும் சோதனை நடத்துவீர்களா என்ற கேள்விகளை முன்வைத்தார். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் ஜெனரல் வழக்கறிஞர் தேவராஜ் சுந்தரேஷ் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்றும் யாரையும் துன்புறுத்தவில்லை என்றும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை தனிநபரோ, யாரோ தொடரவில்லை டாஸ்மாக் நிறுவனமே வழக்கு தொடர்ந்துள்ளது என்ற கேள்வியையும் முன்வைத்தனர். எந்த அதிகாரி தவறு செய்துள்ளார் என தெரியாமல் எப்படி அனைத்து அதிகாரிகளையும் நீங்கள் தடுத்து வைத்து சிறை பிடித்தீர்கள் என்ற கேள்வியையும் முன்வைத்தனர்.
அமலாக்கத்துறைக்கு உரிய அதிகாரம் இருந்தாலும் அதை செயல்படுத்தும் விதம் தவறு என நீதிபதிகள் சுட்டி காட்டினர். தொடர்ந்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். எதற்காக அலுவலகம் சென்றீர்கள் என்று அமலாக்கத்துறை தகவலை தெரிவித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். மார்ச் 25ஆம் தேதி எந்த நடவடிக்கை எடுக்க கூடாது என்ற தடை உத்தரவையும் பிறப்பித்தனர். அமலாக்கத்துறை சோதனை நடத்த காரணமான வழக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
The post டாஸ்மாக் வழக்கில் மார்ச் 25ஆம் தேதி வரை எந்த நடவடிக்கை எடுக்க கூடாது: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.