முதல்வர் மு.க.ஸ்டாலின்: காலை உணவு திட்டம் அறிவிக்கப்பட்டு வெளிநாடுகள் எல்லாம் பாராட்டி இதனை பின்பற்றலாமா என்று யோசிக்கும் அளவிற்கு வரவேற்பை பெற்ற திட்டம். இது எல்லாம் வாக்குரிமை உள்ளவர்களுக்கு கொடுக்கும் திட்டமா?
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: முதலில் தனியார் பங்களிப்புடன் நாங்கள் தான் இந்த திட்டத்தினை கொண்டு வந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் நீங்கள் கொண்டு வந்து விட்டீர்கள்.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: மகளிர் விடியல் பயணம் செய்கின்றனர். அதில் ஓட்டு போடும் வயதினர் மட்டும் செல்ல வேண்டும் என கூறியுள்ளோமா? வாக்குரிமைக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை. மக்கள் நலனுக்காக செய்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் நாங்கள் மடிக்கணினி கொடுத்தோம். அதனை நிறுத்தினீர்கள்.
தங்கம் தென்னரசு: நீங்கள் திட்டத்தை தொடர்ச்சியாக நிறைவேற்றவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க ஆட்சி என்னுடைய தலைமையில் பொறுப்பேற்றபின் முதல்முறையாக பத்திரிகையாளர் சந்திப்பில் நான் கூறிய வார்த்தை இந்த ஆட்சியை பொறுத்தவரை எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து பணியாற்றுவோம் என்று கூறினேன். நாங்கள் செய்யும் திட்டங்களால் ஏன் வாக்களிக்க தவறி விட்டோம் என்று எண்ணும் அளவுக்கு இருக்கும் என்று இருக்கும் சொன்னோம். அதை நோக்கி தான் சொல்கிறோம்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: 52.35 லட்சத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகளை நாங்கள் கொடுத்து இருக்கிறோம், ஏன் நீங்கள் நிறுத்தீனீர்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: மடிக்கணினி திட்டத்தை நாங்கள் நிறுத்தவில்லை. நீங்களே நிறுத்திவிட்டீர்கள். தரமான மடிக்கணினியை உங்களால் கொடுக்க முடியவில்லை. அதனால் நிறுத்திவிட்டீர்கள். அதன்படி எப்படி கொடுப்பது என்பது குறித்து சிந்தித்து அதனை மீண்டும் கொண்டு வந்திருக்கிறோம். எனவே இந்த விவாதம் தேவையற்றது. இவ்வாறு விவாதம் நடந்தது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் பேசுகையில் “ஈரோடு முதல் கோபிசெட்டிப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோபி நகரம் மிகுந்த நெரிசல் ஏற்படும் பகுதியாக இருக்கிறது. அங்கு ஒரு புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என ஏற்கனவே கோரிக்கை விடுத்தேன். பணிகள் நடைபெறும் என கடந்த நிதியாண்டில் அமைச்சர் பதில் அளித்தார். தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, உறுப்பினர் சொல்வது உண்மைதான் என்றும், அங்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது, உறுப்பினர் செங்கோட்டையன் கேள்விக்கு அவருக்கு பிடிக்கும் பதிலை மானியக் கோரிக்கையின் மீது தெரிவிக்கிறேன்” என்றார்.
* சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல் புதிய சட்டக்கல்லூரி தொடங்கும் நடவடிக்கை நிறுத்தி வைப்பு
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன் பேசுகையில், மடத்துக்குளம் பகுதியில் புதிய சட்டக்கல்லூரி அமைக்க அரசு முன் வருமா?\\” என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், புதிய சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் பத்து ஏக்கர் நிலமும், நூறு கோடி ரூபாயும் தேவைப்படுகிறது. சட்டக்கல்லூரியை தொடர்ந்து இயக்குவதற்கு ஆண்டுதோறும் பல லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. எனவே தமிழகத்தில் புதிய சட்டக்கல்லூரி அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\\” என்றார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ஈரோடு கிழக்கு திமுக எம்.எல்.ஏ. சந்திரகுமார் பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தாய்மார்களுக்கும், பெண்களுக்கும், குழந்தைகளுக்கு என பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து அதனை திறம்பட செயல்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே, அவரை இல்லதரசிகளுக்கும், கல்லூரி மாணவ – மாணவிகளும் அப்பாவாக பார்க்கிறார்கள். ஆனால், இதனை பொறுத்துக் கொள்ளாத சிலர் சமூக வலையதளங்களில் கொச்சைப்படுத்தும் விதமாக பேசிவருகின்றனர். இவற்றை பற்றி கவலைப்படாமல் தமிழ்நாடு கொண்டாடும் தலைவராக முதல்வர் உள்ளார் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நாங்கள் நிறுத்தவில்லை; நீங்கள்தான் நிறுத்தியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடிக்கு பதிலடி appeared first on Dinakaran.