ஹோலி மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகை தொடர்பாக இரு சமூக மக்களும் சகோதரத்துவ சூழலைப் பேண வேண்டும் என்று இரு சமூக தலைவர்களும் வேண்டுகோள் விடுத்து இருந்தனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஹோலி கொண்டாட்டம் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது. அதே போல் ரமலான் மாதத்தை முன்னிட்டு வந்த வெள்ளிக்கிழமை தொழுகையும் அமைதியாக முடிந்தது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் பாரம்பரிய ஹோலி ஊர்வலம் நடந்தது.
அங்கு முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதியிலும் தொழுகைக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜும்மா நமாஸின் நேரம் மதியம் 2:30 மணி வரை நீட்டிக்கப்பட்டது. ஷாஜஹான்பூரில், ஊர்வலத்தின் போது சில இடங்களில் கல்வீச்சு நடந்தது. அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
டெல்லியில் 25,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். சிசிடிவி கேமராக்கள் மற்றும் டிரோன்கள் மூலம் சுமார் 300 முக்கியமான பகுதிகளை போலீசார் உன்னிப்பாகக் கண்காணித்தனர். மேற்குவங்கம், அரியானா, பஞ்சாப், அசாம், மணிப்பூர், ராஜஸ்தான், தெலங்கானா, ஆந்திரா, காஷ்மீர், பீகார், மபி உள்ளிட்ட மாநிலங்களிலும் ஹோலி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
* வாலிபர் கொலை
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட மோதலில் ஆகாஷ் சவுத்ரி (20) என்ற வாலிபர் கொல்லப்பட்டதால் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டன. அவரை கத்தியால் குத்திக்கொன்றவரை போலீசார் கைது செய்தனர்.
* வீடுகள் உடைப்பு
உபி மாநிலம் உன்னாவ் பகுதியில் பைக்குகளில் வந்த ஒரு கும்பல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வீடுகள் மீது உடைகள் மற்றும் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் சில வீடுகள் சேதம் அடைந்தன. போதையில் இருந்த இளைஞர்கள் கும்பல், தகாத வார்த்தைகளை பேசியதால் பதற்றம் உருவானது. இருப்பினும் போலீசார் அங்கு சென்று தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
The post அமைதியாக நடந்து முடிந்தது 64 ஆண்டுக்கு பின் ஒரே நாளில் ஹோலி – ரமலான் தொழுகை: வட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.