லெவல் கிராசிங் கேட்டை உடைத்து தண்டவாளத்தில் சிக்கிய லாரி ரயில் மோதி நொறுங்கியது

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் போட்வாட் ரயில் நிலையம் அருகே உள்ள லெவல் கிராசிங் கேட் மூடப்பட்டு இருந்தது. அந்த வழியாக நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மும்பையில் இருந்து அமராவதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது அதிவேகமாக வந்த லாரி ஒன்று லெவல் கிராசிங் கேட் மீது மோதி, ரயில் தண்டவாளத்திற்குள் சென்று அங்கு திடீரென நின்று விட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து லாரியில் இருந்த டிரைவரும், கிளீனரும் ரயிலைப்பார்த்ததும் குறுக்கே ஓடிச்சென்று எச்சரிக்கை செய்தனர். இதனால் அமராவதி எக்ஸ்பிரஸ் என்ஜின் டிரைவர் வேகத்தை குறைத்தார். இருப்பினும் தண்டவாளத்தின் குறுக்கே நின்ற லாரி மீது ரயில் மோதியது.
இதில் லாரி சுக்குநூறாக உடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை. இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன என்று அதிகாரி கூறினார்.

The post லெவல் கிராசிங் கேட்டை உடைத்து தண்டவாளத்தில் சிக்கிய லாரி ரயில் மோதி நொறுங்கியது appeared first on Dinakaran.

Related Stories: