சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பிறகு மானியக் கோரிக்கை மீதான விவாதங்களும் நடைபெற உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக அரசின் நலத்திட்டங்களின் நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கு திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளார்.
இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 14ம் தேதி (இன்று) மாலை 6.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது appeared first on Dinakaran.