கூட்டணி விவகாரம், சர்ச்சை பேச்சு அண்ணாமலைக்கு அமித்ஷா கடைசி எச்சரிக்கை: அதிமுகவை பற்றி பேச தடை; சமரசம் செய்ய எடப்பாடிக்கு தூது; திடீர் ‘அண்ணன்’ பாசம் பற்றி பரபரப்பு பின்னணி

சேலம்: கூட்டணி விவகாரம், சர்ச்சை பேச்சு விவகாரத்தில் அண்ணாமலைக்கு அமித்ஷா கடைசி எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதனால் எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்துகொள்ள அண்ணாமலை தூது விட்டுள்ளார்.
அதிமுகவும் பாஜவும் கடந்த சட்டமன்ற தேர்தலில் இணைந்து பணியாற்றின. அதில் படுதோல்வியை சந்தித்ததால் இருகட்சிகள் தலைவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி கொண்டனர். இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை முறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார்.

அதேபோல் பாஜ தலைவர் அண்ணாமலை அவரது ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த தேர்தலிலும் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைவர்கள் மீது அண்ணாமலை தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, அண்ணாமலை தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனவும், எடப்பாடி பழனிசாமியோ ஒரு சாதாரணமானவர் எனவும் கூறினார். இதன் காரணமாகவே மோதல் வெடித்தது. அதே நேரத்தில் ஜெயலலிதாவை விட எனது தாய் மற்றும் மனைவி மிகவும் வலிமையானவர் என கூறியதால் அதிமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அதிமுக-பாஜவினரிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி சேர பாஜ எவ்வளவோ முயன்றும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக மாஜி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் குழு எடப்பாடியை சந்தித்து பாஜ மேலிடம் கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்த தகவலை தெரிவித்தனர். ஆனாலும் பாஜவுடன் கூட்டணி என்பது நடக்கவே நடக்காது என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதனால் கடுப்பான மாஜி அமைச்சர்கள், கூட்டணிக்கு நாம் இறங்கி செல்லவில்லை என்றால் ஐ.டி, ஈ.டி ரெய்டு நடக்க வாய்ப்பு உள்ளது என்று பாஜ மேலிடம் பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுப்பதாக தெரிவித்து உள்ளனர். இருப்பினும், எடப்பாடி பாஜவுடன் கூட்டணி இல்லை என்று பிடிவாதமாக இருந்து உள்ளார்.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீட்டில் வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் எடப்பாடி பழனிசாமியின் பிடி பாஜவிடம் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் பிறகு எடப்பாடி பழனிசாமி பாஜவுடனான மோதலை முற்றிலும் குறைத்து விட்டார். அதேபோல் மாஜி அமைச்சர் வேலுமணி, தங்கமணி ஆகியோர் பாஜவுடன் கூட்டணி சேர்ந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். அண்ணாமலையை பாஜ மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கினால் கூட்டணியில் சேர்வதற்கான சாத்தியகூறுகள் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் கோவை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, எஸ்.பி.வேலுமணி ரகசியமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக இணைப்பு, கூட்டணி விவகாரம் மற்றும் எடப்பாடி நிலைப்பாடு குறித்து முக்கிய பேச்சு நடந்து உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.பி.வேலுமணிக்கு சில அசைன்மென்ட்டுகளை அமித்ஷாவிடம் கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் நடந்த எஸ்.பி.வேலுமணி மகன் திருமண விழாவில் ஒட்டுமொத்த பாஜ தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, அண்ணாமலைக்கு அதிமுக மாஜி அமைச்சர்கள் கொடுத்த மரியாதையையும், அவர்களுக்கு அண்ணாமலை கொடுத்த மரியாதையையும் பார்த்து அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் மலர உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை, ‘அண்ணன்’ என்று மரியாதையாக பேசி வருவது அதிமுக, பாஜ தொண்டர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. அண்ணாமலையின் இந்த மனமாற்றத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எச்சரிக்கையே காரணம் என பாஜவினர் கூறி வருகின்றனர். பாஜவுடன் சேர்ந்ததால் படுதோல்வியை தழுவினோம் என கூறியவர்கள், தற்போது பாஜவுடன் கூட்டணி சேர தவம் கிடக்கிறார்கள் என சமீபத்தில் அண்ணாமலை கூறினார். இது பாஜவுடனான நெருக்கத்தில் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியது.

கூட்டணியில் சேர எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்து இறங்கி வரும் நிலையில் அண்ணாமலையின் இந்த தவம் கிடக்கும் பேச்சு மீண்டும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பாஜ மூத்த தலைவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அமித்ஷா, தமிழக பாஜ பொறுப்பாளர் சந்தோஷூடன் பேசினார். அப்போது கான்பரன்ஸ் கால் மூலமாக அண்ணாமலையிடம் பேசிய அமித்ஷா, ‘‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. நியமிக்கப்பட்டவர் தான். உங்களது நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாஜ பல்வேறு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

தங்களது தனிப்பட்ட விவகாரத்தில் அரசியலை சேர்த்து தமிழ்நாட்டில் பாஜவை கால் ஊன்ற முடியாமல் வைத்துள்ளீர்கள். இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு. அதிமுக பற்றி வாய் திறக்க கூடாது’’ என கூறியதாக கூறப்படுகிறது. அதன்பிறகே அண்ணாமலையின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக பாஜவுடன் சேர தவம் கிடக்கிறது என நான் கூறவில்லை என பல்டி அடித்ததோடு, எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என அழைத்து வருகிறார். தானும் அதிமுகவும் தமிழ்நாட்டில் மிகவும் நெருக்கமாக உள்ளதாக காட்டிக்கொள்ளும் நடவடிக்கையில் அண்ணாமலை இறங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேச ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் கேட்பதற்காக இந்த சந்திப்பை நடத்தியாக வேண்டும் என தூது விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு சந்திப்பதன் மூலம் டெல்லியின் ஆதரவை பெற்றுவிடலாம் என அவர் திட்டம் தீட்டியுள்ளார். அதிமுகவை பொறுத்தவரை மும்மொழி கொள்கைக்கு ஜெயலலிதா காலத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டு எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் நீட் தேர்வு, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அதிமுக ஆதரவு தெரிவித்துவிட்டது.

இதனால் தமிழக அரசியலில் சிறுபான்மையின மக்களின் ஓட்டு அதிமுகவுக்கு முற்றிலும் கிடைக்கவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் அண்ணாமலை தன்னை வந்து சந்தித்தால் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திக்கு தெரியாத காட்டில் அண்ணாமலை தவித்து வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். அண்ணாமலையிடம் பேசிய அமித்ஷா, ‘‘நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல. நியமிக்கப்பட்டவர் தான்.

உங்களது நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாஜ பல்வேறு தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு. அதிமுக பற்றி வாய் திறக்க கூடாது’ என்று கூறி உள்ளார். தற்போது உள்ள சூழ்நிலையில் அண்ணாமலை தன்னை வந்து சந்தித்தால் பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திக்கு தெரியாத காட்டில்அண்ணாமலை தவித்து வருவதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

The post கூட்டணி விவகாரம், சர்ச்சை பேச்சு அண்ணாமலைக்கு அமித்ஷா கடைசி எச்சரிக்கை: அதிமுகவை பற்றி பேச தடை; சமரசம் செய்ய எடப்பாடிக்கு தூது; திடீர் ‘அண்ணன்’ பாசம் பற்றி பரபரப்பு பின்னணி appeared first on Dinakaran.

Related Stories: