×

வைகுண்ட ஏகாதசியும் தானங்களும்

மகாவிஷ்ணுக்குள் இருந்த சக்தியானது பெண் உருவம் கொண்டு முரனை எரித்துச் சாம்பலாக்கியது. மகாவிஷ்ணு அச்சக்திக்கு ஏகாதசி என்று பெயரிட்டு, அரக்கனை வதைத்த நாளில் விரதம் மேற்கொண்டு, மகாவிஷ்ணுவை வழிபடுவோருக்கு மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்தை அடையும் பேற்றை வழங்குவதாக அருளினார். மனிதர்களின் ஓராண்டு, தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும்.

அதன்படி, மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இம்மாதம், மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. இந்த மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி, ‘உத்பத்தி ஏகாதசி’ எனப்படுகிறது. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானசர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக, அவருடைய முன்னோர்கள் வைகுண்ட பதம் (முக்தி) அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும்விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு “வைகுண்ட ஏகாதசி’’ என்று போற்றப்படுகிறது.

மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் ‘முக்கோடி ஏகாதசி’ என்றும் பெயர். வைகுண்ட ஏகாதசி அன்று கோயிலின் வடக்குப் புறத்தில் உள்ள வாயில் திறக்கப்பட்டு, மக்கள் அவ்வாயிலினை கடந்து செல்கின்றனர். இதுவே “சொர்க்க வாசல் திறப்பு’’ நிகழ்ச்சியாகும். விரதம் இருந்து இவ்வாயிலினை கடந்து சென்றால், மீண்டும் பிறவாமை நிலை ஏற்பட்டு, வைகுண்டத்தை அடையலாம் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், மார்கழி மாத ஏகாதசி விரதம் வைகுண்டப் பதவிக்கு வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.

உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, தின்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள்.மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, கோபூஜை செய்வதை “வைதரணி விரதம்’’ என்பர். பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும்.

குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்த நாள்தான் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் மகாவிஷ்ணுவின் படம் அல்லது சிலைக்கு வழிபாடு நடத்தலாம். வழிபாட்டில் மஞ்சள், குங்குமம், வாழை மற்றும் பிற பழவகைகள், துளசி ஆகியவை இடம் பெறவேண்டும். மகாவிஷ்ணுவின் பாடல்களை பாடலாம், தியானம் செய்யலாம். அதன் பின் அருகில் உள்ள விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும்.

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று நிர்ஜலம் உபவாசம் (தண்ணீர்கூட அருந்தாமல்) இருப்பது முழுபலனைக் கொடுக்கும். வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் அன்னம் ஆகாரத்தை அருந்தாமல் (அரிசியினால் செய்த சாதம்) கோதுமை உப்புமா, சத்துமாவு கஞ்சி போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்ள்ளாம். ஏகாதசி அன்று இரவு முழுவதும் விழித்து மகாவிஷ்ணுவின் எட்டு எழுத்து மந்திரமான “ஓம் நமோ நாராயணா’’ என்பதையும், விஷ்ணு சஹஸ்‌ரநாமம், நாராயண கவசம், விஷ்ணு புராணம் ஆகிய மகாவிஷ்ணு பற்றிய பாடல் களைப் பாடி வழிபாடு செய்வது பல நன்மைகளை தரும்.

இப்படி உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசி அன்று காலையில் குளித்துவிட்டு மீண்டும் கோயில் சென்று வணங்கிவிட்டு, காலை உணவினை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். அப்போதுதான் பூரண பலன் கிட்டும். மேலும், துவாதசி அன்று மாலை சூரியன் மறைவிற்கு பிறகே தூங்கவேண்டும்.

தொகுப்பு: ஜெயசெல்வி

The post வைகுண்ட ஏகாதசியும் தானங்களும் appeared first on Dinakaran.

Tags : Donations ,Mahavishna ,Murran ,Mahavishnu ,Akhakti Ekadashi ,Vaikunda ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2024-ம் ஆண்டு உண்டியலில் ரூ.1,365 கோடி காணிக்கை