×

வைகுண்ட ஏகாதசியும் பொங்கல் திருநாளும்

வைகுண்ட ஏகாதசியும்: 10-1-2025 – பொங்கல் திருநாளும்: 14-1-2025

1. முன்னுரை

சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சாந்திரமான முறைதான் ஆலய உற்சவங்களிலும் விரத நாள்கள் நிர்ணயங்களிலும் பின்பற்றப்படுகிறது. அந்த முறையில் மார்கழி அமாவாசை முடிந்துவிட்டாலே தைமாதம் பிறந்து விட்டதாகப் பொருள் .தை மாதம் என்பது உத்தராயண காலத்தின் முதல் மாதம். மகர சங்கராந்தி என்று சொல்வார்கள். அதாவது உத்த ராயணத்தின் முதல் பாகையான மகர ராசியிலே உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் சூரியன் பிரவேசி க்கும் உயர்ந்த நாள். இந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாகக் கொண்டாடுகிறோம். மார்கழி அமாவாசை முடிந்து வளர்பிறையில் வரும் ஏகாதசிதான் வைகுண்ட ஏகாதசி. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியும், தைத் திருநாளாகிய பொங்கல் திருநாளும் அடுத்தடுத்து நிகழ இருக்கின்றன.

10.1.2025 வைகுண்ட ஏகாதசி
11.1.2025 கூடாரை வல்லி
13.1.2025 போகி
14.1.2025 – தை மாதப் பிறப்பு பொங்கல் திருநாள்

வைகுண்ட ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றியும் ,தைத்திருநாளின் சிறப்புகளைப் பற்றியும் இந்த முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண இருக்கின்றோம்.

2. ஏகாதசி விரத மகிமை

மார்கழி மாதமானது உத்திராயணம் என்கின்ற தேவர்களின் பகல் பொழுது காலத்தின் துவக்க காலமாக அதாவது உத்தராயணத்தின் பிரம்ம முகூர்த்த காலம். அது வழிபாட்டுக்குரிய நேரம் என்பதால் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன் என்று பகவான் கண்ணன் கீதையில் மகிழ்ந்துரை செய்தார். மார்கழி மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. தேய்பிறை ஏகாதசிக்கு உற்பத்தி ஏகாதசி என்று பெயர். வளர்பிறை ஏகாதசிக்கு மோட்ச ஏகாதசி அல்லது முக்கோடி ஏகாதசி என்று பெயர்.

விரதங்களில் ராஜவிரதம் என்று ஏகாதசி விரதத்தைத் சொல்வார்கள். இந்த விரதத்தை பகவானே அனுஷ்டிப்பது ராமாயண மகாபாரத இதிகாச புராணங்களில் வருகின்றது. சகல தேவர்களும் இந்த விரதங்களை அனுஷ்டிக்கின்றார்கள். ஏகாதசி விரதத்தின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. ஒருவருடைய இம்மைத் துயரங்களை நீக்கி மறுமையில் மிகப்பெரிய பதத்தைப் பெற்றுத் தருவது இந்த விரதம்.

3. மஹாவிஷ்ணுவை எதிர்த்த அசுரன்

வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும் 12 வளர்பிறை ஏகாதசிகளும் 12 தேய்பிறை ஏகாதசிகளும் வரும். சில ஆண்டுகளில் அதிகப்படியாக ஒரு ஏகாதசியும் வரும். இத்தனை ஏகாதசிகளின் ஆரம்பம் மார்கழி மாத தேய்பிறை ஏகாதசியில்தான் தொடங்குகிறது என்பதால் அதனை உற்பத்தி ஏகாதசி என்றார்கள். உற்பத்தி ஏகாதசிக்கு அடிப்படையான கதை முரண் என்கின்ற அசுரனின் கதை. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு இந்த விரதம் தோன்றிய கதையை, எடுத்துரைக்கிறார்.

4. முரணும் ஏகாதசியும்

சத்ய யுகத்தில், சந்திராவதி எனும் நகரத்தை தலைநகரமாகக்கொண்டு, முரண் என்றொரு அசுரன் வாழ்ந்துவந்தான். இந்திரப்பதவியை பறித்துக்கொண்டு அவனை அடித்து விரட்டி மக்களையும் மிகவும் துன்புறுத்தினான். இத்துன்பத்திலிருந்து விடுபடத் தகுந்த உபாயம் கூறி தங்களைக் காக்கும்படி அனைவரும் மகாதேவரை சரணடைய ,அவர் ஸ்ரீஹரியை சரணடையுங்கள். அவர் உங்களைக் காத்தருள்வார் என்று யோசனை கூறினார்.

தேவர்களும் மஹாவிஷ்ணுவிடம் “முரன் என்னும் அசுரன் அதிகமான வரப்பலம் கொண்டு விளங்குவதால், தேவர்களை விரட்டியடித்து விட்டு, அசுரர்களை இந்திரன், வருணன், அக்னி, யமன் என பதவிகளில் நியமித்து விட்டான். அவனே சூரியனாகி பூமியைத் தகிக்கிறான். மேகமாகி பேய்மழை பொழிகிறான். இவனிடமிருந்து உலகையும், எங்களையும் காக்க வேண்டும்” என்று வேண்டினர்.

5. அசுரனுடன் போர்

இதனைக் கேட்ட மஹாவிஷ்ணு சந்திராவதி பட்டினம் சென்று அசுரனோடு போர் செய்தார். முரனும், ஆக்ரோஷமாக போர் புரியத் துவங்கினான். பகவான் தனது சக்ராயுதத்தினால், அசுரர்களின் அஸ்திர வித்தைகளையும், மாயாஜாலங்களையும் துவம்சம் செய்தார். ஆனாலும், முரண் அசரவில்லை. அஸ்திர பிரயோகங்களுக்குப் பிறகும், அவன் போர் செய்துகொண்டே இருந்தான். தேவர்கள் கொடுத்த வரம் பழுதாகாமல் இருக்க பகவானும் அவனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். 1000 தேவ ஆண்டுகள் விடாமல் போர்புரிந்தார். ஒரு கட்டத்தில் சிறிது ஓய்வெடுக்க வேண்டி, பத்ரிகாஸ்ரமத்தில் 28 கஜ தூரம் கொண்ட ஒரு துவாரத்துடன் கூடிய ஹேமவதிஎன்னும் பெயர் கொண்ட குகையில் சென்று சயனத்தில் ஆழ்ந்தார்.

6. ஏகாதசி தோன்றினாள்

பகவானை தேடிய முரன் வாளை உருவி பகவானைக் கொல்ல நெருங்கியபோது, மஹாவிஷ்ணுவின் தேகத்திலிருந்து திவ்ய அலங்காரங்களுடன், சகல ஆயுதங்களோடும் ஒரு பெண் தோன்றினாள். நிமிட நேரத்தில் ஓங்கார சப்த கர்ஜனையோடு அசுரனுடன் ஆவேசமாகப் போர்புரியத் தொடங்கினாள். அவளை அழிக்கப் பாய்ந்து வந்த வேளையில் அசுரனை வதம் செய்தாள். சிரத்தைக் கொய்து மண்ணில் வீசி அவனை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தாள்.விழித்தெழுந்த பகவான், தரையில் கிடந்த முரனின் உடலைப் பார்த்தார். அந்தப் பெண் இறைவனை வணங்கினாள் . பகவானே! இந்தக் கொடிய அரக்கன்,தாங்கள் சயனித்திருந்த வேளையில் தங்களைக் கொல்ல முற்பட்டான். உங்களது சரீரத்திலிருந்து தோன்றி இவனை வதைத்தேன் என்று கூறி கரம் கூப்பி நின்றாள்.

7. ஏகாதசி கேட்ட வரம்

அதைக் கேட்ட ஸ்ரீமந் நாராயணன் உன் செயல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீ வேண்டும் வரம் கேள்! என்றார்.அப்போது அந்தப் பெண் “நாராயணா!! தேவரோ, அசுரரோ, மனிதரோ, மிருகமோ, பிராணியோ, பட்சியோ எவரொருவர் நான் தோன்றிய நாளில் விரதம் அனுஷ்டிக்கிறாரோ, அவர் பாவங்கள் அனைத்தும் நீங்கி இறுதியில் தங்கள் பதம் அடைய வேண்டும்” என்று பிரார்த்தித்தாள்.

பகவான் அவள் கேட்ட வரத்தைத் தந்தார்.பெண்ணே , நீ 11ஆம் நாள் தோன்றியதால் உலகத்தோரால் இன்று முதல் ஏகாதசி என அழைக்கப் பெறுவாய் !! என்றருளினார். பகவானுக்கு விருப்பமான திதிகளான திரிதியை, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி வரிசையில் நீ உயர்ந்த இடத்தை அடைவாய் என்றார். எனவே பகவானின் அவதார தினத்தை விட பகவானின் தேகத்தில் இருந்து தோன்றிய ஏகாதசி முதன்மை பெற்றது.

8. வைகுண்ட ஏகாதசி தோன்றிய கதை

வைகுண்ட ஏகாதசி ,பரமபத வாசல் திறப்புக்கு ஒரு கதை உண்டு. மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள். நான்முகனிட மிருந்து வேதத்தை அபகரித்துச் சென்றனர். நான்முகன் திகைத்து பகவான் நாராயணனிடம் முறையிட்டார். திருமால் குதிரை முகத்துடன் ஹயக்ரீவராக அவதரித்தார் அசுரர்களை வதைத்து, வேதங்களை மீட்டார். அப்போது மனம் திருந்திய இருவரும் தங்களுக்கு முக்தியளிக்குமாறு திருமாலிடம் வேண்டினர் .மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று, மது -கைடபர்களுக்காக வைகுண்டத்தின் வடக்கு வாசலைத் திறந்து அவ்விருவரையும் வைகுண்டத்துக்குள்ளே அழைத்துச் சென்றார் வைகுண்ட வாசலைத் திறந்து மது கைடபருக்குமுக்தியளித்த ஏகாதசி என்பதால், வைகுண்ட ஏகாதசி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது.

மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில் பரமபத வாசல் என்ற அந்த வைகுந்த துவாரத்தின் வழியாக நாம் பகவானை சென்று சேவிக்கிறோம் . பரமபதத்தில் உள்ள நுழைவு வாசல் வழியாக திருமாமணி மண்டபத்திலே ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவியோடு அமர்ந்திருக்க கூடிய பெருமாளிடம் சென்று, பேரின்பத்தைப் பெற்று, நித்ய கைங்கரியம் செய்யும் வாய்ப்பைப் பெறுகிறோம் என்று பொருள்.

9. ஏகாதசியில் உள்ள வாழ்வியல் செய்தி

முதல் கதையிலிருந்தும், மது கைடபர்கள் கதையிலிருந்தும் வாழ்வியலுக்கு தேவையான இரண்டு விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏகாதசி என்பது பதினோராம் நாள் தோன்றிய பெண் என்பது ஒரு குறியீடு. பஞ்ச கர்ம இந்திரியங்களையும் ,பஞ்ச ஞானந்திரியங்களையும் ,மனதையும் ஆக மொத்தம் 11 ஐயும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மிகப் பெரிய சக்தியைப் படைத்து, எந்த அசுர சக்தியையும் வீழ்த்திவிடலாம் என்பதை காட்டியவள் ஏகாதசி. இரண்டாவதாக அசுரர்களாக இருந்தாலும் கூட, அவர்கள் மனம் திருந்தி பகவானிடம் சரணடைந்தால், அவன் முக்தியையும் தருவான் என்கிற செய்தியையும் நமக்குச் சொல்லித் தருவது இந்த ஏகாதசி.

10. மது கைடபர் கேட்ட வரம்

“நாங்கள் முக்தியடைந்த இந்நாளில், யாரெல்லாம். முறையாக விரதமிருந்து துளசி மாலை சமர்ப்பித்து உன்னைத் தரிசனம் செய்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் நீ முக்தியளிக்க வேண்டும்! ” என்று மது கைடபர்கள் வேண்ட அதை ஏற்று அருள்புரிந்தார் திருமால். அதனால்தான் வைகுண்ட ஏகாதசியன்று, அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் வடக்குப் புறத்தில் உள்ள வைகுண்ட வாசல் (பரமபத வாசல் ) திறக்கப்படுகிறது. வைகுண்டத்தின் வாசலைத் திறந்து மது கைடபர்களுக்கு முக்தி அளித்தது போல், அந்த வைகுண்ட வாசல் வழியாக வந்து தன்னை சேவிப்போர் அனைவருக்கும் திருமால் நல்ல சௌக்கியமான வாழ்வைத் தந்து நிறைவில் முக்தியளிப்பார்.

11. எத்தனை பெருமை தெரியுமா?

ருக்மாங்கத மன்னன் தனது நாட்டில் அனைவரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும்படி செய்தாராம். அதனால் மக்கள் அனைவரும் பக்தியிலும், ஞானத்திலும் சிறந்து, நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று நாரத புராணம் கூறுகிறது.அம்பரீஷ மன்னன் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து அடைந்த நன்மைகளை ஸ்ரீபாகவத புராணம் விவரிக்கிறது. பகவானின் சக்கரத்தைப் பெற்றான் அம்பரீஷ மன்னன். மகா விஷ்ணு கூர்மமாகவும், தன்வந்த்ரியாகவும், மோகினியாகவும் அவதாரம் எடுத்து பாற்கடலில் அம்ருதத்தை வெளிப்படுத்தியதும் ஏகாதசியன்றே. இப்படி ஏகாதசி விரத பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.பெற்ற தாயை விட ஆவன செய்யும் விரதம் வைகுண்ட ஏகாதசி விரதம்.பெற்ற தாய் உடலை மட்டுமே காப்பாற்றுவாள்.ஏகாதசி விரதம் ஆன்மாவைக் காப்பாற்றும்.

12. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10ம் தேதி சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை வருகிறது.ஆண்டாள் “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்றல்லவா திருப்பாவையில் பாடுகின்றாள். அது மட்டுமில்லை. இந்த நாள் பாற்கடலைக் கடைந்த நாள். பாற்கடலில் தோன்றியவள் மஹாலஷ்மி.அன்று சந்திரனுக்குரிய ரோகிணியும் வருகிறது. பாற்கடலில் சந்திரனும் தோன்றியதால் மஹாலஷ்மியை சந்திர சகோதரி என்பார் கள். இப்படி பல சுபத்துவங்களோடு இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விளங்குகிறது. ஜனவரி 10ம் தேதி காலை 9 .23 வரை ஏகாதசி இருக்கிறது. அடுத்த நாள் துவாதசி காலை ஏழு முப்பது மணிக்கு முடிகிறது எனவே துவாதசி திதி நான்காவது பாகமாகிய சனிக்கிழமை காலை சூரிய உதயத்துக்கு முன் துவாதசி பாரனை செய்யலாம்.

13. பெருமாள் கோயில்களில் வடமொழி வேதமும் தமிழ் வேதமும்

தனுர் மாதம் தேவர்களுக்கு விடியல் . அது ப்ராஹ்ம முகூர்த்தமாயும் சாத்விக காலமாகவும் இருப்பதால், ஸ்ரீமந் நாராயணனை பூஜிக்க மிகவும் உகந்தது. வைஷ்ணவ ஆகமங்கள், மார்கழி மாதத்தில் வளர்பிறை ஏகாதசியன்று பெருமாளுக்கு சிறப்பான வழிபாடு செய்து, வேதங்கள், இதிஹாச புராணங்கள், வேத திவ்ய ப்ரபந்தங்கள் மற்றும் ஸ்தோத்ரங்கள். ஆகியவற்றை பெருமாள் முன் ஓத வேண்டும் என்று கூறுகின்றன.

இதன் அடிப்படையில் திருமங்கையாழ்வாரால் நம்பெருமாள் ஆணைப்படி வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் ஏற்பாடு செய்யப்பட்டது.மார்கழியில் திருவரங்கத்தில் தொடங்கி எல்லா பெருமாள் ஆலயங்களிலும் திருஅத்யயன உத்சவம் நடைபெறும். மார்கழி மாதத்தில் வளர்பிறை ப்ரதமை தொடங்கி இருபது நாள்கள் பகவானுக்கு இந்த உத்சவம் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் விதிக்கின்றன. அதன்படி ப்ரதமை முதல் தசமி வரை 10 நாள்கள் நடக்கும் உத்ஸவத்திற்கு அத்யயன உத்ஸவம் என்று பெயர்.இந்த உற்சவத்தில் 11ம் நாள்தான் வைகுண்ட ஏகாதசி.

14. மோக்ஷோத்ஸவம் வைகுண்ட ஏகாதசி முதல் பஞ்சமி வரை

10 நாள்கள் நடக்கும் உத்ஸவத்திற்கு மோக்ஷோத்ஸவம் என்று பெயர். ஆக இருபது நாள்கள் இந்த உத்சவம் பகல் பத்து என்றும், இராப்பத்து என்றும் இரண்டு பிரிவாக நடத்தப்படுகிறது. அத்யயன உத்சவம் பகலிலும், மோக்ஷ உத்சவம் இரவிலும் நடத்தப்படுகிறது. இவ்விருபது நாள் உத்சவத்தைத் திருவத்யயன உத்சவம் என்று நம்பிள்ளை ஈடு-10-2-8 குறிப்பிடுகிறது. அத்யயன உத்சவம் என்பதால் வேதங்களை எம்பெருமான் முன் சொல்லுவதே இவ்வுத்சவத்தின் குறிக்கோளாகும்.

15. திருவரங்கத்தில் பரமபத வாசல் திறப்பு

இராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் (டிசம்பர் 10)ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்துபக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.விடிய விடிய காத்திருந்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில்க்லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள்.

வைகுண்ட ஏகாதசி நாளில்தான் இராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் தொடங்கு கிறது. இராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார். இராப்பத்து ஏழாம் திருநாளில் நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளில் திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளில் தீர்த்தவாரியும்அடுத்த நாள் நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.

16. திருவரங்கமும் பரமபத வாசலும்

கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டம் செல்வார் யாருமில் லாமையாலே வைகுண்டக் கதவு மூடியே கிடந்தது. ஆழ்வார் திருவாய்மொழி அருளிச் செய்து வீடு பெற்றார்.அதன் பின்பே சுவர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆழ்வார் வைகுந்தம் செல்லும் நிகழ்ச்சியை நடத்திக்காட்ட திருமங்கை யாழ்வார் வைகுண்ட ஏகாதசி உத்ஸவத்தை ஏற்படுத்தினார். வைகுண்ட ஏகாதசியன்று பெருமான் பரமபதத்திலிருந்து வந்து, நம்மாழ்வாரை எதிர் கொண்டழைத்துக் கொண்டு, பரமபதம் சென்று, தானும், தேவிமார்களும் நித்ய முக்தரும் அமர்ந்திருக்கும் திருமாமணி மண்டபத்திலே , ஆழ்வார் கையில் தாளம் கொடுத்து திருவாய்மொழி பாடக் கேட்பது ஐதீகம் . இதனை அடிப்படையாகக் கொண்டு. திருமங்கையாழ்வார் காலம் முதல் சுவர்க்க வாசலில் நம்மாழ்வார் எழுந்தருளி, திருவாய்மொழிப் பாடலைத் தொடங்கிய பின்பே பரமபத கதவு திறப்பு நடக்கிறது.

17. எப்படி விரதம் இருப்பது?

விரதங்களுக்குள் தலையாயது ஏகாதசி விரதம். அனைத்து ஏகாதசிகளிலும் சிறப்பானது வைகுண்ட ஏகாதசி. எட்டு வயது முதல் எண்பது வயது வரை மனிதர்கள் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என்று ஸ்ம்ருதி வாக்யம் கூறுகிறது.வைகுண்ட ஏகாதசியன்று, வைகுண்ட வாசல் வழியாகச் சென்று பெருமாளைத் தரிசிப்பது மிகவும் முக்கியம்.முடிந்தால் ரங்கம் செல்லலாம். அல்லது அருகிலுள்ள பெருமாள் கோயில் சென்று வழி படலாம்.சில கோயில் களில் பரமபத வாசல் இருக்காது .அந்த கோயில்களில் பெருமாளைச் சேவித்தாலே போதும்.அன்று தண்ணீர் கூட உட்கொள்ளாமல் (நிர் ஜலமாக) விரதம் இருப்பது மிகவும் சிறப்பானதாகும்.

அவ்வாறு விரதம் இருக்க இயலா தவர்கள், பால் பழம் எளிய பலகாரங்களை உட்கொள்ளலாம். மறுநாள் துவாதசியன்று காலை பூஜை செய்து பெருமாளின் தீர்த்தத்தை உட்கொண்டு, அதன்பின் அகத்திக்கீரை,சுண்டைக்காய், நெல்லிக்காய் போன்றவற்றை உணவு வோடு உட்கொண்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு விரதத்தை நிறைவு செய்வதற்கு துவாதசி பாரணை என்று பெயர். அன்றும் பகலில் உறங்காமல் இருந்து மாலை சூரியன் மறைந்த பின்தான் உறங்க வேண்டும்.

18. செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும்

ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவைசாப்பிட வேண்டும். ஏகாதசி நாளில் முழுமையாகப் பட்டினி கிடக்க வேண்டும். இரவு உறங்காமல், திருமால் சரிதங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் படிக்கலாம் கேட்கலாம்.ஏகாதசியன்று அன்னதானம் செய்யக்கூடாது. பகலில் தூங்கக்கூடாது. இரவில் பஜனை செய்ய வேண்டும். முடியாதவர்கள் பகவானுடைய நாமங்களைச் சொல்ல வேண்டும். ஏகாதசி தினத்தில் கோபம் கொள்ளக்கூடாது பிறரை தூஷித்தல், கடுமையான வார்த்தை சொல்லுதல், சந்தனம் பூசுதல், வெற்றிலை போடுதல், மாலை அணிதல், கண்ணாடி பார்த்தல் முதலானவை கூடாது.

19. கூடாரை வல்லி

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள் இந்த ஆண்டு கூடாரை வல்லி உற்சவ நாள் வருகிறது. அன்று கோயில்களில் ஆண்டாள் திருமஞ்சனம் நடைபெறும் திருப்பாவையின் 27 வது பாசுரம்,” கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்ற பாசுரம். திருப்பாவை நோன்பு கிட்டத்தட்ட நிறைவேறும் நாள் என்று இதைச் சொல்லுவார்கள். காரணம், திருப்பாவை ஆரம்பிக்கும்போது ஆண்டாள்,“நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்று பலவிதமான பொருட்களை இந்த விரதத்தின் பயன்படுத்துவதில்லை என்று சங்கல்பித்து கொள்ளுகின்றாள். அதைப் போலவே ,“மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்” என்று, அலங்காரம் செய்வதும் இல்லை என்று ஆரம்பத்திலேயே சொன்னாள்.

இந்தப் பாசுரத்தில்,” மூடநெய் பெய்து முழங்கை வழி வாரக் கூடியிருந்து குளிர்வோம் ” என்று எல்லோரையும் வைத்துக்கொண்டு, இன்று நாங்கள் சர்க்கரைப் பொங்கல் செய்து சாப்பிடுவோம் என்று சொல்வதிலிருந்து., இது நோன்பு நிறைவேறிய நாளாகக் கருதிக் கொண்டாடுவார்கள். குறை யொன்று மில்லாத கோவிந்தனை வழிபடுகின்ற பொழுது ஒவ்வொருவர் மனக் குறையும் தீர்ந்துவிடும் என்பதால், அன்று புத்தாடை அணிந்து, ஆண்டாள் புடவை எடுத்து வைத்து, ஆண்டாள் படத்துக்கு பூமாலை சூட்டி, வழிபாடு நடத்துவார்கள் ‘பால் சோறு மூட நெய் பெய்து’ என்று இருப்பதால், அக்கார அடிசிலான பால் சோறு, நூறு தடாவில் சமர்ப்பிக்கும் வழக்கம், இன்றைக்கும் அழகர்மலையில், கள்ளழகருக்கு நடைபெற்று வருகிறது.

20. போகிப்பண்டிகை

தைமாதத்தை ஆரம்பிக்கும் முன் மார் கழியின் கடைசிநாள் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பல ஆலயங்களில் திருப்பாவை சாற்றுமுறை நடந்து ஆண்டாள் திருக்கல்யாணமும் நடைபெறும்.பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது போல வீடுகளைத்தூய்மையாக்கும் பணி செய்வர். தேவையற்ற பொருளை நெருப்பில் எரித்து விடுவர். சிலர் வீடுகளுக்கு வண்ணம் பூசி அலங்காரம் செய்வர். போகிப்பண்டிகை கொண்டாடும் மக்கள் தங்கள் வீட்டின் மேற்கூரையில் காப்புக்கட்டுதல், மாயிலைத் தோரணங்கள் கட்டுவது போன்றவற்றைப் பின்பற்றி வருகிறார்கள்.

21. போகியில் என்ன செய்ய வேண்டும்?

தையில் பொங்கல் பண்டிகை ஆரம்பித்தாலும் மார்கழி கடைசி நாளில் அதன் முதல் பண்டிகையான போகி கொண்டாடப் படுகிறது. போகிப்பண்டிகை அன்று அதிகாலை நீராடி பல்வேறு காய்கறிகள் சமைக்கப்பட்ட உணவை பகவானுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். போகி அன்று, வைகறையில் ‘நிலைப் பொங்கல்’ வைக்கப்படும்.. வீட்டின் முன் வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச்செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி வணங்குவர்.

நிலத்திற்கு ஏராளமான செழிப்பைக் கொடுக்கும் மழைக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த படையல் போட்டு வணங்குவார்கள். அன்று போளி, வடை, பாயசம், மொச்சை, சிறுதானியங்கள், பருப்பு வகைகள் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும். பிறகு அனைவரும் உண்டு களிக்க வேண்டும்.

22. மகர சங்கராந்தி

14.1.2025 தை மாதம் (மகர சங்கராந்தி) பிறக்கிறது. மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி என்பது சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும். இன்றிலிருந்து உத்தராயணகாலத் துவக்கம். இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாகும். இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடைத் திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கலாசாரத்தின் தாக்கம் கொண்ட, இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மர், இலங்கை போன்ற ஆசிய நாடுகளிலும் கூட மகர சங்கராந்தி விழா வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

பூமி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்டு வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தைத் திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. வடமொழியில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். சில திருமால் ஆலயங்களில் இரண்டு வாசல் இருக்கும்.ஒன்று தெற்கு வாசல்.இன்னொன்று வடக்கு வாசல்.இன்று முதல் ஆறுமாத காலத்திற்கு வடக்கு (உத்தராயண வாசல்) வழியாக பெருமாளை தரிசிக்க வேண்டும்.

23. வானியல் சிறப்பு

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை .மகர ராசியின் முதல் பாகையில் அதாவது உத்திராட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியன் காலை 11 மணி 46 நிமிடங்களுக்கு நுழைகின்றனர். இதே நேரத்தில் சந்திரன் கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் இருக்கின்றார். மகரமும் கடகமும் நேர் ஏழாவது ராசி என்பதால் சூரியனும் சந்திரனும் சந்தித்துக்கொள்ளும் உத்திராயண கால மாதப்பிறப்பு என்பதால் காலையில் பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். சந்திரன் தனக்குரிய ராசியில் ஆட்சிப்பலம் பெறுவதால் அங்கே இருக்கக்கூடிய செவ்வாயின் நீசபலம் மாறி நீச்ச பங்க ராஜயோகம் ஏற்படுகின்றது சந்திர மங்கள யோகம் என்று சொல்லக்கூடிய யோகம் ஏற்படும் நாளாக இந்த நாள் விளங்குகின்றது.

அதைவிட முக்கியமாக குருபகவான் ரிஷப ராசியில் இருந்து மகரராசியைப் பார்வையிடுகின்றார். எனவே, சூரியன் குருவின் இணைவு ஏற்பட்டு யோகமாக மாறுகின்றது. இந்த ஆண்டு தைப்பொங்கல் பிறக்கக்கூடிய நாள் ஜோதிடரீதியாக மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக விளங்குகின்றது. இந்த நாளில் மகர லக்கனம் உள்ள வேளையில் அதாவது ஏழு முப்பது முதல் எட்டு முப்பது மணிக்குள் புது பானை வைத்து பொங்கலிட்டு குல தெய்வத்திற்கும் சூரிய னுக்கும் படையல் போட வேண்டும். இன்று காலை ஒன்பதரை மணி முதல் எமகண்டம் ஆரம்பிப்பதால் அதற்கு முன்னாலேயே இந்த பூஜையை செய்வது நல்லது மகர லக்கினத்தில் பூஜை செய்வதால் குருவினுடைய பார்வையால் அனைத்து தோஷங்களும் கழியும். புது வாழ்வு கிடைக்கும்.

24. புதுப்பானை, புதுஅரிசி

மகரராசிக்குள் சூரியன் நுழையும் நாளான இந்த மகர சங்க்ராந்தி நாளில் தானம் செய்வது சிறப்பு. இந்நாளில் புண்ணிய நதிகளில் நீராடி, அந்த நதிக்கரையில் கோதானம் செய்வது மிகச்சிறப்பான தாகும்.பொங்கலுக்கு எல்லாமே புதியன இருக்க வேண்டும். புத்தாடை, புத்தரிசி, புது வெல்லம், புதுக் கரும்பு, புதுப்பானை என புதியதாகவே இருக்க வேண்டும்.முற்றத்தில் பொங்கலிடுவது சிறந்தது. இன்னும் சிலர் பொங்கலுக்கென்று தனியாக வெங்கலப் பொங்கல்பானை வைத்திருப்பார்கள். சிலர் வழிவழியாக வந்த வெண்கலப்பானை வைத்திருப்பார்கள்.

அவரவர்கள் குல ஆச்சாரம், வழிமுறைதான் முக்கியம். அந்த பானையைச் சுத்தப்படுத்தி, அதன் கழுத்தில் மஞ்சள் கொத்தைச் சுற்றுவார்கள். அதற்குச் சந்தனம் குங்குமம் அணிவித்துத் திலகம் வைத்து அதில் பாலை நிரப்புவார்கள். அதை அடுப்பில் வைத்து, பால் பொங்குகின்ற வேளையில், பால் பொங்கி வருவது போல், நம் இல்லங்களிலும் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் “பொங்கலோ பொங்கல்.” என்று முழங்கி (குலவையிடுதல்), அரிசியை இடுவார்கள்.

25. சூரியனுக்கு படையல்

பொங்கல் அன்று குலதெய்வ வழிபாடு,சூரிய வழிப்பாடு,இஷ்ட தெய்வ வழிபாடு முக்கியம்.தை மாதம் முதல் நாளன்று, புதிதாக அறுவடை செய்த நெல்லில் இருந்து எடுக்கப்பட்ட புத்தரிசி, பால், வெல்லம்ஆகியவற்றைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் தயாரிப்பார்கள். நமக்கு வாழ்வில் எல்லா நாள்களும் இனிதாக அமைய வேண்டும் என்று பிரார்த்தித்து, இனிப்பான சர்க்கரைப் பொங்கலும், கரும்பும் சூரியனுக்குச் சமர்ப்பித்து, சூரிய பகவானை வழிபடுவார்கள். மேலும், வெண்பொங்கல், வடை, பல காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கூட்டு உள்ளிட்டவற்றையும் சூரியனுக்கு நிவேதனம் செய்து வழிபடுவார்கள். அன்று புதிய வெங்கலப் பாத்திரத்தோடு சர்க்கரைப் பொங்கலைத் தானம் செய்வதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும்.

26. மாட்டுப் பொங்கல்

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். மாடு என்றாலே செல்வம். மாடுகள் இதிகாச புராண காலம் தொட்டே மனித ஜீவனத்திற்கும், விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்துள்ளன. பசுவை கோமாதா என்றும் குலமாதா என்றும் கொண்டாடுகின்றோம். பசுவின் உடம்பில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களும் குடி கொண்டுள்ளனர். பசுவைப் பூஜித்து வலம் வந்தால் எல்லாத் தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

ஸ்ரீமகாலக்ஷ்மியின் முழு சாந்நித்யமும் பசுவிடம் நிறைந்துள்ளது. எனவே மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை விதவிதமாக அலங்காரம் செய்து, பூஜைகளை நடத்தி, வீதியில் வலம் வருவர். இப்படி நமக்கு பலவிதங்களில் உதவும் மாடுகளுக்கு நன்றி சொல்வதற்காக, தைப் பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் கொண் டாடப்படுகிறது.அன்று மாடுகளை நீராட்டி, அவற்றுக்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் அணிவித்து அலங்காரம் செய்து, வாழைப்பழம், வெண்பொங்கல் மற்றும் பலவகை உணவுகளைத் தந்து வணங்குவார்கள். அவ்வாறே உழவுக் கருவிகளையும் சுத்தம் செய்து அவற்றுக்குச் சந்தனம் குங்குமம் அணி விப்பார்கள்.

27. தைப் பூசமும் மாட்டுப்பொங்கலும்

இந்த ஆண்டு மாட்டுப்பொங்கல் அன்று தை பூச உற்சவமும் வருகிறது.இது வேறு எந்த ஆண்டிலும் இல்லாத சிறப்பு.தைப்பூசம் என்பது தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் முருகப்பெருமானின் அருள் பெற விரதமிருந்து வழிபடும் விழாவாகும். வள்ளல் வடலூர் ராமலிங்க சுவாமிகள் ஜோதியில் இரண்டறக் கலந்தது, ஒரு தைப்பூச நன்னாளில்தான். அதனால்தான் வடலூரில் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளில் முருகனை வழிபடும் பக்தர்கள் கல்வி, செல்வம், ஞானம் என்ற மூன்றிலும் சிறந்து விளங்குவார்கள். தைப் பூசத்தன்று ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீபெரும்பூதூரில் அவருடைய விக்ரஹத்திற்கு தம் சக்தி விசேஷத்தை அளித்ததாக வரலாறு. எனவே, அன்று ஸ்ரீராமாநுஜருக்கும் திருமஞ்சனம், புறப்பாடு நடத்தி குரு அருளைப் பெற வேண்டும். ஸ்ரீபெரும் பூதூரில் இந்த உத்ஸவம் குருபுஷ்ய உத்ஸவம் என்று ஐந்து நாள்களுக்கு நடத்தப்படுகிறது.

28. கோயில்களில் பொங்கல் உற்சவம்

மார்கழி மாதத்தில் தினமும் விடியற்காலை பாராயணம் செய்த திருப்பள்ளிஎழுச்சியும்,திருப்பாவையும் தை மாதம் முதல் நாளன்றே நிறைவு பெறுவதால், திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருப்பாவை ஸேவித்து சாற்றுமறையும், வங்கக்கடல் கடைந்த என்ற நாள்பாட்டும் ஸேவித்து திருப்பாவை சாற்று மறையை நிறைவு செய்ய வேண்டும். இன்று பெருமாள் ஆண்டாள் சேர்த்தியாக எழுந்தருளச் செய்து, புறப்பாடும் செய்ய வேண்டும். சங்கராந்திக்கு மறுநாள் காலையில் கனு உத்ஸவமும், மாலை மாட்டுப் பொங்கல் விழாவும் கொண்டாடுவர். மாட்டுப்பொங்கல் அன்று காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்தி, மாலையில் குதிரை வாகனத்தில் புறப்பாடு செய்வார்கள். பெருமாள், குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாடுகளுடன் வீதி வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுவும் கிருஷ்ணாவதாரத்தோடு தொடர்புடைய நிகழ்ச்சியாகும்.

29. கணு உற்சவம்

மாட்டுப் பொங்கலன்று காலை, பெண்கள் புத்தாடை உடுத்தி, நதிதீரத்துக்குச் சென்று முதன் நாள் படைத்த அன்னத்தில் மஞ்சள், குங்குமம் கலந்து, தனித்தனியாக மஞ்சள் சாதம், சிவப்புச் சாதம், வெறும் சாதம் என்று உருண்டையாகப் பிடித்து இலையில் வைத்து, கற்பூர தீபாராதனை செய்து நைவேத்யம் செய்வர். உடன்பிறந்தோர் நல்வாழ்வை வேண்டும் விழா இது.

மொட்டை மாடியிலோ கொல்லைப் புறத்திலோ, தூய்மையான இடத்தில் கோலம் போட்டு அதன் மேல் மஞ்சள் இலைவைத்து, அந்த மஞ்சள் இலையில் ஒவ்வொரு அன்னத்தையும் 5 அல்லது 7 என ஒற்றைப்படையில் பிடித்து வைப்பார்கள். அத்துடன் வாழைப்பழம், கரும்புத் துண்டு போன்றவற்றையும் வைப்பார்கள். இதற்குக் கணுப்பிடி என்று பெயர்.கணுப்பிடி வைக்கும் போது “காக்கா பிடி வெச்சேன், கணுப்பிடி வெச்சேன். காக்கைக்கு எல்லாம் கல்யாணம், கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்!’’ என்று பெண்கள் தம் உடன் பிறந்தவர்களின் நலனுக்காக வழிபடுவார்கள்.

30. காணும் பொங்கல்

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல்மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும்.பல இடங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.பொங்கல் திருநாளின் நான்காம் நாளில் ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நாளில், விழுப்புரம் மாவட்டம், பிடாகத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் மக்கள், குடும்பத்தினருடன் கூடுவார்கள். சுற்றுப்புறக் கோயில்களில் இருந்து உற்சவர்களும்ஆற்றுக்கு எழுந்தருளுவார்கள். இப்படி பக்தியும் மகிழ்ச்சியும் கலந்த அற்புதமான பண்டிகை பொங்கல் பண்டிகை. மனதை சிறப்பாக்கி வாழ்வை வளமாக்கும் இந்தப் பண்டிகைகளின் சிறப்புணர்ந்து இந்த ஆண்டும் கொண்டாடு வோம்.வாருங்கள்.

தொகுப்பு: எஸ். கோகுலாச்சாரி

The post வைகுண்ட ஏகாதசியும் பொங்கல் திருநாளும் appeared first on Dinakaran.

Tags : Vaikunda Ekadasi ,Pongal Thirunal ,Marghazi New Moon ,
× RELATED வைகுண்ட ஏகாதசியும் தானங்களும்