இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக கேரளாவை சேர்ந்த சோம்நாத் உள்ளார். கடந்த 2022ம் ஆண்டு தலைவராக பதவியேற்ற இவரது பதவி காலம் வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.நாராயணன், திருவனந்தபுரத்தில் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குநராக பணியற்றியுள்ளார். இவர் ஜி.எஸ்.எல்.வி., எம்.கே-3, கிரயோஜெனிக் இன்ஜின் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வரும் 14ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்று அடுத்த 2 ஆண்டுகள் பதவியில் நீடிப்பார்.
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி டாக்டர் வி.நாராயணன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காட்டுவிளை பகுதியை சேர்ந்த வன்னிய பெருமாள்- தங்கம்மாள் தம்பதியின் மகன். தந்தை தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளி படிப்பை கீழ காட்டுவிளை அரசு தொடக்கப் பள்ளியிலும், உயர்நிலை படிப்பை ஆதிக்காட்டுவிளை ஊராட்சியில் உள்ள சியோன்புரம் சி.எஸ்.ஐ எல்எம்எஸ் பள்ளியிலும் படித்தார். தொடர்ந்து நாகர்கோவில், கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் டிப்ளமோ முடித்த அவர், கரக்பூர் ஐஐடியில் கிரயோஜெனிக் இன்ஜினியரிங் பிரிவில் எம்.டெக் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் பி.எச்டி முடித்துள்ளார்.
1984ல் பணியில் சேர்ந்தார். முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உடன் இணைந்து பணியாற்றினார். ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் தயாரிப்பில் முக்கிய பொறுப்புகள் வகித்தவர். தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள எல்பிஎஸ்சி இயக்குநராக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் நாராயணனுக்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் இருந்து விஞ்ஞானி மாதவன் நாயர், விஞ்ஞானி சிவன் ஆகியோர் இஸ்ரோ தலைவராக பதவி வகித்திருந்தனர்.
மூன்றாவதாக தற்போது நாராயணன் இஸ்ரோ தலைவராகியுள்ளார். வரும் 14ம் தேதி நாராயணன் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவரது பதவி காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகள் அல்லது மறு அறிவிப்பு வெளியாகும் வரை நாராயணன் இஸ்ரோ தலைவராக பதவி வகிப்பார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி 57, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல் 1, ஜிஎஸ்எல்வி எம் கே 3, சந்திரயான் 2, 3 உள்ளிட்ட திட்டங்களில் விஞ்ஞானி நாராயணன் பணியாற்றியுள்ளார்.
ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளின் நிபுணராக நாராயணன் விளங்குகிறார். இஸ்ரோவின் உயரிய பொறுப்பான டிஸ்டிங்குவிஷ் சயின்ஸ்ட், கோரக்பூர் ஐஐடியின் வெள்ளி பதக்கம், இந்திய விண்வெளி மையத்தின் தங்க பதக்கம் போன்றவற்றையும் நாராயணன் பெற்றுள்ளார். இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத் பதவி காலம் அடுத்த வாரம் நிறைவு பெற உள்ள நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகின்ற ககன்யான், வெள்ளிக்கோள் ஆய்வில் ஈடுபடும் சுக்ரயான் போன்ற திட்டங்கள் நாராயணன் மேற்பார்வையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது.
* 2005ல் இந்திய விண்வெளி அமைப்பு சார்பில் நாராயணனுக்கு அப்போதய பிரதமர் மன்மோகன் சிங் தங்கப்பதக்கம் வழங்கினார்.
அடுத்தபடம்: 2014ல் சி 25 கிரயோஜெனிக் இன்ஜின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கும் விஞ்ஞானி நாராயணன்.
* நாராயணனுக்கு முதல்வர் வாழ்த்து
முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்! குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல் 1, ககன்யான் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த – தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணன் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்! என்று கூறியுள்ளார்.
* சொந்த கிராமத்தில் மகிழ்ச்சி
இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டதை சொந்த கிராமத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். நாராயணன் பயின்ற கீழக்காட்டுவிளை அரசு தொடக்க பள்ளியில் தற்போது 17 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் சிவதாணு. ஆசிரியர் ஒய்ஸ்லின் பிலோமினாள் கூறுகையில், ‘இந்த பள்ளியில் 1969 முதல் 1974 வரை பயின்ற முன்னாள் மாணவர் நாராயணன் இஸ்ரோ தலைவராக உயர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. அரசு பள்ளியில் பயின்று உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை இது காட்டுகிறது. சொந்த கிராமத்திற்கு வரும்போது விஞ்ஞானி நாராயணன் இப்பள்ளிக்கு வருவது உண்டு. பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக அவர் உறுதியளித்திருந்தார்’ என்றார்.
சியோன்புரம் சிஎஸ்ஐ எல்எம்எஸ் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கிளாரா பூரண ஞான்சி, ‘எங்கள் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயின்றவர் நாராயணன். அவர் இன்று உயர்ந்த நிலையை எட்டியுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. எங்கள் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானி ஒருவர் எங்கள் பள்ளியில் பயின்றவர் என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்றார். நாராயணனின் சித்தப்பா மேல காட்டுவிளை நாராயண பெருமாள் (82) கூறுகையில், ‘மிகவும் சிரமப்பட்டுதான் வாழ்க்கை நடத்தினோம். இன்று நாராயணன் உயர்ந்த நிலையை அடைந்திருப்பது கண்டு பெருமைப்படுகிறோம். எப்போது பார்த்தாலும் எல்லோரையும் படிக்க வைக்க வேண்டும் என்பார். நான் படிக்காவிட்டாலும், எனது பிள்ளைகளை படிக்க வைத்துள்ளேன்’ என்றார்.
நாராயணனின் மற்றொரு சித்தப்பா செல்லத்துரை கூறுகையில், ‘ அந்த காலத்தில் எங்களுக்கு படிக்க வாய்ப்பு இல்லாத நிலை இருந்தது. தந்தையுடன் வியாபாரத்தை கவனித்து வந்தோம். தனக்கு பதவி உயர்வு கிடைத்ததும் எங்களை அழைத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்’ என்றார். கீழகாட்டுவிளை வை.செல்வகுமார் கூறுகையில், ‘ஏழ்மை குடும்பத்தில் பிறந்து அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து குடும்பத்தில் முதல் தலைமுறையில் உயர்ந்து நிற்கிறார். படிப்பில் பல முறை தங்க பதக்கம் வென்றுள்ளார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் 25க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். இவர் அடங்கிய விஞ்ஞானிகள் குழுதான் கிரயோஜெனிக் இன்ஜின் தயாரிப்பில் ஈடுபட்டு சாதனை படைத்தது. அவர் பதவி உயர்வு பெறும்போது எல்லாம் சொந்த ஊருக்கு வந்து உறவினர்கள், நண்பர்கள் ஆசி பெற்று செல்வார். கோயில் வழிபாடுகளிலும் தவறாது பங்கேற்று செல்வார். ஏழ்மை நிலையில் படிக்கின்றவர்களுக்கு உதவுவது அவரது வழக்கம்’ என்றார்.
* இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் : – நாராயணன் சிறப்பு பேட்டி
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணன் தினகரன் நிபருக்கு அளித்த சிறப்பு பேட்டி: இஸ்ரோ தலைவராக என்னை தேர்வு செய்துள்ள பிரதமர் மோடிக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிக முக்கியமான பொறுப்பாகும். நான் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்து 41 ஆண்டுகள் ஆகிறது. இஸ்ரோ தலைவர், விண்வெளி ஆணைய தலைவர் மற்றும் விண்வெளித் துறை செயலாளர் ஆகிய மூன்று முக்கிய பொறுப்புகள் எனக்கு உள்ளன. இந்திய விண்வெளி ஆய்வில் பல்வேறு முக்கிய துறைகளில் நான் பணிபுரிந்துள்ளேன்.
இந்தியாவுக்கு மற்ற நாடுகள் தர மறுத்த கிரயோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத் துறையில் திட்ட இயக்குநராக இருந்துள்ளேன். நான் இதில் திட்ட இயக்குநராக இருந்தபோதுதான் மார்க் 3 ராக்கெட் கிரயோஜெனிக் இன்ஜின் திட்டம் வெற்றியடைந்தது. விண்வெளி ஆய்வில் நாம் பல உலக சாதனைகளை படைத்துள்ளோம். சந்திரயான் 2 திட்டம் இறுதிவரை வெற்றிகரமாக சென்றது. ஆனால் கடைசியில் நிலவில் மென்மையாக தரை இறக்க முடியாமல் அந்தத் திட்டம் தோல்வியடைந்தது. இதனால் சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்காக தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு நான் தலைவராக நியமிக்கப்பட்டேன்.
சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைவதற்கு என்னென்ன காரணங்கள் என கண்டுபிடிக்கப்பட்டு அவை அனைத்தையும் நிவர்த்தி செய்ததால் தான் சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக அமைந்தது. இதன் மூலம் உலகில் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமை நமக்கு கிடைத்தது. எதிர்காலத்தில் இஸ்ரோவுக்கு ஏராளமான திட்டங்கள் உள்ளன. நிலவுக்கு மனிதர்களை கொண்டு சென்று திரும்பும் ககன்யான் திட்டம், வருங்காலத்தில் விண்வெளி நிலையம் அமைப்பதற்காக 2 செயற்கைக்கோள்களை இணைத்து பின்னர் பிரிக்கும் ஸ்பேடக்ஸ் திட்டம், சந்திரயான் 4 திட்டத்தில் செயற்கைக்கோளை நிலவில் இறக்கி அங்கிருந்து மாதிரிகளை கொண்டுவரும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் உள்ளன.
சந்திரயான் 3, 4000 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளாகும். ஆனால் சந்திரயான் 4 செயற்கைக்கோள் 9 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் அனைத்துமே சுகாதாரம், கல்வி உள்பட பல்வேறு துறைகளின் முன்னேற்றம் போன்ற நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கும். வரும் 14ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளேன். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே என்னுடைய முதல் லட்சியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
* நாராயணனின் குடும்பம்
நாராயணனுக்கு கவிதாராஜ் என்ற மனைவியும் அனுபமா என்ற மகளும், காலேஷ் என்ற மகனும் உள்ளனர். நாராயணனின் தந்தை வன்னியபெருமாள் காலமாகிவிட்ட நிலையில் தந்தையின் சகோதரர்கள் வைகுண்டபெருமாள், நாராயணபெருமாள், செல்லத்துரை அவரது சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். மேலும் நாராயணனின் உடன் பிறந்த சகோதரர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் கோபாலகிருஷ்ணன், பத்மநாபன், கிருஷ்ணமணி உள்ளிட்டோரும் உள்ளனர்.
The post அரசு பள்ளியில் தமிழ் வழியில் பயின்று இஸ்ரோ தலைவராக உயர்ந்த குமரி விஞ்ஞானி நாராயணன் appeared first on Dinakaran.