காவல் கரங்கள்” மூலம் 3 ஆண்டுகளில் மீட்கப்பட்டவர்களில் 1,201 பேர் அவர்தம் குடும்பத்துடன் மீண்டும் சேர்ப்பு


சென்னை: சென்னை பெருநகர காவல் “காவல் கரங்கள்” மூலம் 3 ஆண்டுகளில் மீட்கப்பட்டவர்களில் 1,201 பேர் அவர்தம் குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவலில், பெண்கள் (1091), குழந்தைகள் (1098), மூத்த குடிமக்கள் (1253), 75 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்காக பந்தம் (94999 57575) காவல் ஆணையாளர் SMS உதவி சேவை (95000 99100) மற்றும் ஆதரவற்றவர்களை மீட்கும் காவல் கரங்கள் (94447 17100) ஆகிய உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் அவர்களின் உத்தரவின் பேரில் உதவி மையங்களில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் பொதுமக்களின் அவசர அழைப்பிற்கு துரிதமாக செயல்பட்டு விரைந்து உதவிகளை செய்து வருகின்றனர்.

காவல் கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் கபில் குமார் சி சரட்கர், அவர்களின் மேற்பார்வையில் காவல் கரங்கள் உதவி மையம் கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 94447 17100 என்ற எண்ணில் (24 x7) வரும் அழைப்பின் மூலம் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை பொதுமக்களின் தகவலின் பேரில், மீட்பு வாகனங்கள் மூலம் மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டும், காணாமல் போனவர்களாக இருப்பின் மீண்டும் CCTNS தகவல் பரிமாற்றம் மூலம் விவரங்கள் பெற்று உறவினர்களிடம் ஒப்படைத்தும், “மனிதம் போற்றுவோம் மனித நேயம் காப்போம்” என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி காவல் பணியுடன் NGO தன்னார்வலர்கள், அரசு மருத்துவமனைகள், பெருநகர சென்னை மாநகராட்சி, அரசு, NGO காப்பக இல்லங்கள் உதவியுடன் ஒருங்கிணைந்து சேவை பணி ஆற்றி வருகின்றனர்.

உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்களை தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. உணவு வழங்கி வரும் அமைப்புகள் மூலம் உணவுகள் சேகரிக்கப்பட்டு தேவையுள்ள ஆதரவற்றவர்கள் தங்கியுள்ள காப்பகங்களுக்கு வழங்கியும் வருகிறது.

கடந்த 03.01.2025 அன்று சுமார் 75 வயது மதிக்கதக்க மூதாட்டி பெயர் விலாசம் சொல்ல தெரியாத நிலையில் வடபழனி காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட புதிய வெள்ளாளர் தெருவில் ஆதரவின்றி சுற்றி திரிந்தவரை சென்னை பெருநகர காவல், காவல் கரங்கள் குழு மூலம் மீட்டு காப்பகத்தில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் காவல் கரங்கள் தன்னார்வலர்கள் மூலம் மூதாட்டியின் புகைபடத்தை காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்ததில் J-3 கிண்டி காவல் நிலைய குற்ற எண். 07/2025 பெண் காணவில்லை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்ட மேற்படி மூதாட்டியை தேடிவந்தது தெரியவந்தது.

மீட்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து 04.01.2025 அவர்களை நேரில் வரவழைத்து விசாரணை செய்ததில் காணாமல் போனவர் கிண்டி, மடுவன்கரை பகுதியை சேர்ந்ததிருமதி.வேதவள்ளி என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட மூதாட்டி திருமதி.வேதவள்ளி நல்ல முறையில் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதுவரை காவல் கரங்கள் உதவி மையம் மூலம் 7,712 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் 5,304 பேர் காப்பகங்களில் தங்க வைத்தும், 1,201 பேர் காணாமல் போனவராக பரிதவிப்புடன் குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் கண்டறிந்து மீட்டு மீண்டும் அவர்கள் குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

887 மனநல பாதிப்படைந்தவர்கள் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தும், 400 நபர்களுக்கு மேல் சிகிச்சை முடிந்து குடும்பத்தினரிடம் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்ற 320 நபர்கள் உள்நோயாளிகளாக பல்வேறு மருத்துவமனைகளில் 108 மூலம் சேர்க்கப்பட்டு NGO தன்னார்வலர்கள், மருத்துவமனை காவல் நிலையம் மூலம் உரிய உதவிகள் வழங்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.

காவல் துறை காவல் கரங்கள் உணவு உதவி வாகனம் மூலம் இதுவரை 2,04,774 நபர்களுக்கு உணவுகள் சேகரிக்கப்பட்டு, காப்பகங்கள் மூலம் வழங்கப்பட்டது. உரிமை கோரப்படாத 4,601 இறந்த நபர்களின் உடல்கள் காவல் துறை தன்னார்வலர்களின் உதவியுடன் உரிய இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்து சென்னை பெருநகர காவல் கரங்கள் உதவி மையம் உதவி செய்து வருகிறது.

பொதுமக்கள் மேற்கண்ட சென்னை பெருநகர காவல் துறையின் உதவி மையங்களை தொடர்பு கொண்டு பயனடையும்படியும், தேவைப்படுபவர்களுக்கு அவசர உதவி எண்கள் மூலம் தொடர்பு கொள்ள உதவிடவும் கேட்டு கொள்ளப்படுகிறது.

The post காவல் கரங்கள்” மூலம் 3 ஆண்டுகளில் மீட்கப்பட்டவர்களில் 1,201 பேர் அவர்தம் குடும்பத்துடன் மீண்டும் சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: