அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை : அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்டதிட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்டது தொடர்பாகவும் தாக்கல் செய்திருக்கும் உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், எட்டு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கும் ஆணை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தேர்தலை ஆணையம் விசாரணை நடத்தி வார்க்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, மனு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க கூடாது என ரவீந்திரநாத், கே.சி.பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சிவில் வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்தல் ஆணையம் இந்த வழக்கை விசாரணை நடத்த கூடாது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரியமான் சுந்தரம் வாதங்களை முன்வைத்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதித்து, ஜன.27-க்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக பொதுச்செயலர் பதவி தொடர்பான வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Related Stories: