காரனோடை – ஜனப்பசத்திரம் இடையே ஜல்லி கற்கள் பெயர்ந்து பழுதான கூட்டுச்சாலை; சீரமைக்க கோரிக்கை

புழல்: சோழவரம் அடுத்து காரனோடை – ஜனப்பசத்திரம் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படும் கூட்டுச்சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சோழவரம் அடுத்த காரனோடை – ஜனப்பசத்திரம் கூட்டு சாலை மேம்பாலத்தின் கீழே செல்லும் சப்வே மற்றும் காரனோடை நோக்கிச் செல்லும் சாலை பகுதிகளில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்.

மேலும், வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால், அருகிலுள்ள கடைக்காரர்களும், பேருந்துக்காக காத்திருக்கும் வியாபாரிகளும், பயணிகளும் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து ஜனப்பசத்திரம் கூட்டு சாலை சப்வே பகுதியில் தரமான சாலை அமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ஜனப்பசத்திரம் கூட்டு சாலை மேம்பாலம் கீழே செல்லும் சப்வே மற்றும் காரனோடை நோக்கி செல்லும் சாலை சமீபத்தில் பெய்த மழையால் ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இச்சாலையில், வாகனங்கள் செல்லும்போது தூசு காற்றில் பறந்து அருகிலுள்ள கடைகளுக்கும், வாகனங்களில் செல்வர்கள் மீதும் படுவதால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது.

மேலும், இச்சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இதுகுறித்து, சாலையை பராமரிப்பு செய்யும் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கசாவடி அலுவலகத்தில் புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை துறையினர், உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும். சாலையை புதுப்பிக்காமல் இருந்தால் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

The post காரனோடை – ஜனப்பசத்திரம் இடையே ஜல்லி கற்கள் பெயர்ந்து பழுதான கூட்டுச்சாலை; சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: