இதுகுறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் முதன்முறையாக பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இதில், பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் கலந்துகொண்டு பல்வேறு வடிவங்கள் மற்றும் தனித்துவமான வண்ணங்களில் பலூன்களை பறக்க விட உள்ளனர்’’ என்றனர். இந்நிலையில், சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது: தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தனியாருடன் இணைந்து பட்டம் விடும் திருவிழா, பலூன் திருவிழாக்களை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்புடன் சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வெப்பக்காற்று பலூன் திருவிழா நடத்தப்பட உள்ளது. சுற்றுலாத்துறை மூலம் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை விரைவில் முடித்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றுலா கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும் பணிகளை மேற்கொள்வோம். 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் என்ற லட்சிய இலக்கினை அடைய, சுற்றுலாத்துறையின் பங்களிப்பு முதன்மையாக இருக்கும் வகையில் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் சுற்றுலா ஆணையரக உயர் அதிகாரிகள், சுற்றுலா அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post திருவிடந்தையில் 20 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா நாளை கோலாகல தொடக்கம்: சிறப்பாக நடத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.