மும்பை: இந்திய கிரிக்கெட்டில் நிலவி வரும் சூப்பர்ஸ்டார் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மாஜி வீரர் ஹர்பஜன்சிங் வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியா அணி க்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடைந்திருக்கும் தோல்வி கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி செய்து வந்த ஆதிக்கம் திடீரென முடிவுக்கு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேர்வு குழு தொடங்கி பிசிசிஐ வரை முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியதாவது:-
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தது வரை எல்லாம் சரியாக இருந்ததை போல் தெரிந்தது.
ஆனால் திடீரென இந்திய அணி வீரர்களுக்கு என்ன ஆனது? டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினாலும், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பின் தங்கி இருக்கிறோம். கடந்த 6 மாதங்களில் இலங்கையுடன் ஒருநாள் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-0 என்று தோல்வி, ஆஸ்திரேலியாவில் 3-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்திருக்கிறோம். திடீரென எல்லாம் தலைகீழாக மாறி சீட்டுக் கட்டை போல் சரிந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் அனைத்து வீரர்களுக்கும் மரியாதையும், கவுரவமும் இருக்கிறது. அதற்காக தோல்வியின் போது கூட நடவடிக்கை எடுக்காமல் இருக்க கூடாது. அப்படி சீனியர் வீரர்கள் தேவையென்றால் கபில்தேவ், அனில் கும்ப்ளேவை கூட தேர்வு செய்யுங்கள். இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னராக இருந்தாலும் ஃபார்மில் இல்லையென்றால், தேர்வு குழு கொஞ்சம் கூட தயக்கம் காட்டக்கூடாது.
இந்திய கிரிக்கெட்டில் நிலவி வரும் சூப்பர்ஸ்டார் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். அபிமன்யூ ஈஸ்வரனுக்கு கடைசி போட்டியில் கூட விளையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே சூழல் தான் சர்பராஸ் கானுக்கும் நிகழ்ந்துள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சிறப்பாக ஆடிய வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும். வீரர்களின் முன் வரலாற்றையோ, பெயரையோ பார்த்து தேர்வு குழு செயல்பட கூடாது. விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்டோர் ஓய்வை அறிவிக்கலாம், அறிவிக்காமலும் போகலாம். ஆனால் அவர்களை தேர்வு செய்வது தேர்வு குழுவின் கைகளில் மட்டுமே இருக்கிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு தான் அதனை முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்திய கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும்: ஹர்பஜன்சிங் `காட்டம்’ appeared first on Dinakaran.