மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சுற்றித் திரியும் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.1000 வெகுமதி வழங்கப்படும் என அறிவிப்பு

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சுற்றித் திரியும் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.1000 வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தூரை யாசகர்கள்இல்லாத நகரமாக மாற்ற மத்தியப்பிரதேச அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஜன.2ம் தேதி பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாட்டு உத்தரவில், நகரத்தில் பிச்சை எடுப்பவர்களிடம் பிச்சை எடுப்பது, கொடுப்பது அல்லது வாங்குவது சட்டப்படி குற்றமாகும் எனவும் இந்த விதியை மீறினால், இந்திய நீதிச் சட்டம் பிரிவு 223ன் கீழ் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிச்சைக்காரர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக சிறப்பு அலைபேசி எண்ணையும் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த 4 சில நாட்களாக அந்த எண்ணுக்கு சுமார் 200 அழைப்புகள் வந்துள்ளதாகவும், அதில் 12 பேரின் தகவல்கள் சரியானவை எனவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று இந்த 12 பேரில் 6 பேருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலா ரூ.1,000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

கடந்த நான்கு மாதங்களில், நகரில் பிச்சை எடுப்பதில் ஈடுபட்ட சுமார் 400 பேர் மறுவாழ்வுக்காக தங்குமிடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், 64 குழந்தைகள் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இம்முயற்சியின் நோக்கம் பிச்சை எடுப்பதை மட்டும் நிறுத்தாமல், இந்த மக்களை மீண்டும் சமூகத்தின் பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வருவதும் ஆகும் என்று நிர்வாகம் கூறுகிறது.

இத்திட்டத்தின் கீழ், பிச்சைக்காரர்கள் இல்லாத 10 நகரங்களில் இந்தூர் உள்ளது. இந்த மாதிரியை நாட்டின் பிற நகரங்களிலும் செயல்படுத்த முடியும் என்று நிர்வாகம் நம்புகிறது. இத்திட்டம் நகர மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

The post மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சுற்றித் திரியும் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் ரூ.1000 வெகுமதி வழங்கப்படும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: