புஷ்பா பட கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை பார்த்தார் நடிகர் அல்லு அர்ஜூன்

திருமலை: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் கடந்த டிசம்பர் 4ம் தேதி புஷ்பா 2 திரைப்படம் சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. இதனை காண பாஸ்கர் – ரேவதி தம்பதியினர் தங்களது இரண்டு பிள்ளைகளுடன் வந்தனர். நடிகர் அல்லு அர்ஜுனும் தியேட்டருக்கு வந்திருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி உயிரிழந்தார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கில் ஏற்கனவே அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே ஸ்ரீதேஜை மருத்துவமனையில் சென்று பார்க்க அனுமதிக்க வேண்டும் என போலீசாரிடம் நடிகர் அல்லு அர்ஜுன் அனுமதி கேட்டு இருந்தார். ஆனால் போலீசார் அங்கு செல்லாமல் இருப்பது நல்லது என்றும் கட்டாயம் செல்ல வேண்டும் என்றால் போலீசாருக்கும் மருத்துவமனைக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கு வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீதேஜை நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று நேரில் சென்று சந்தித்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் ஸ்ரீதேஜ் தந்தை பாஸ்கரிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்து ரேவதி இறந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு அவரது குடும்பத்தினருக்கு எப்போதும் துணையாக இருப்பதாக உறுதி அளித்தார்.

The post புஷ்பா பட கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை பார்த்தார் நடிகர் அல்லு அர்ஜூன் appeared first on Dinakaran.

Related Stories: