குடியாத்தம், டிச.31: குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் எஸ்பி மதிவாணன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது வழக்குப்பதிந்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் விவரங்கள் குறித்து, டவுன் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் கேட்டறிந்தார். மேலும், காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கையொப்பமிட்டார. அதன் பின்னர் நிருபர்களிடையே எஸ்பி மதிவாணன் கூறியதாவது: பாலியல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டோர் அளிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீசார் இதில் மெத்தனமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2023ம் ஆண்டை விட 2024ம் ஆண்டில் சாலை விபத்தின் இறப்பு குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விபத்துக்கள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மாநிலத்திலிருந்து வேலூர் மாவட்ட காவல்துறைக்கு சாலை பாதுகாப்பு நிதி ₹10 லட்சம் வழங்கப்பட்டது. அதன் மூலம் அனைத்து காவல் நிலையங்களில் பேகார்ட்டு உள்ளிட்ட சாலை உபகரணங்கள் வாங்கி வழங்கப்பட்டுள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணி அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, புத்தாண்டு கொண்டாட்டம் , சாலை விபத்து தடுப்பது மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்து குடியாத்தம் ஏடிஎஸ்பி பாஸ்கரன், டிஎஸ்பி ராமச்சந்திரனிடம் எஸ்பி ஆலோசனை நடத்தினார். பின்னர் குடியாத்தம் ஒரு வழி சாலை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் குமாரிடம் விவரங்களை கேட்டறிந்து, வரைபடத்தை பார்வையிட்டார்.
The post பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது மெத்தனம் காட்டினால் கடும் நடவடிக்கை போலீசாருக்கு எஸ்பி அறிவுரை குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் ஆய்வு appeared first on Dinakaran.