பாட்னா: ஆர்ஜேடி கட்சியுடன் 2 முறை கூட்டணி அமைத்து தவறு செய்து விட்டதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ்,நிதிஷ்குமாருக்கான கதவுகள் திறந்தே உள்ளன. அவர் எங்களுடைய கூட்டணிக்கு வந்தால் அவரையும் அழைத்து செல்வோம் என்று கூறினார். ஒருவேளை நிதிஷ்குமார் ஆளும் கூட்டணியில் இருந்து வெளியேறினால் ஒன்றிய பாஜ அரசு கவிழும் என்பதால் தேசிய அரசியலிலும் பீகார் அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில்,முசாபர்பூரில் நிதிஷ் நேற்று பேட்டியளித்தார். அப்போது கூட்டணிக்கு லாலு விடுத்த அழைப்பு குறித்து கேட்கப்பட்ட போது,‘‘ஆர்ஜேடியுடன் 2 முறை கூட்டணி அமைத்து தவறு செய்து விட்டேன். லாலு ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மாலை ஆனதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சப்பட்டனர். அப்போது பெண்களின் நிலை எப்படி இருந்தது. தற்போது ஜீவிகா என்ற பெயரில் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த திட்டத்தை அஜீவிகா என்ற பெயரில் ஒன்றிய அரசு செயல்படுத்தியுள்ளது’’ என்றார்.
The post லாலு அழைப்பை நிராகரித்த நிதிஷ்குமார் ஆர்ஜேடியுடன் 2 முறை கூட்டணி வைத்து தவறு செய்து விட்டேன் appeared first on Dinakaran.